இலங்கை அரசாங்கம் நல்லிணக்கமிக்க அரசியலை நோக்கிச் செல்ல முயற்சிக்கும்போது அதற்கு வெளிநாடுகளில் வாழும் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் புதிய இராணுவத் தளபதியான தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 20 வது புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஆர். எம். டி. ரத்னாயக்க நேற்று இராணு வத் தலைமையகத்தில் சுபவேளையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோதல் முடிவுக்கு வந்து நாட்டில் அரசியல் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்நிலையில், சர்வதேச நாடுகளிலுள்ள பிரிவினைவாதிகள் செயற்பாடுகள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
இத்தகைய சவால்களுக்கு முகம்கொடுக்க கூடிய வகையில் இராணுவத்தின் தந்திரோபாய நுட்பங்களுடனான செயற்பாடுகள் அமைய வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுக்க அறிவு, திறமை, தொழில்நுட்பம் கொண்ட பலம்மிக்க அமைப்பாக இராணுவம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு இராணுவத்தின் உயர் பதவியை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தன்னை இப்பதவிக்காக சிபாரிசு செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு இதன்போது அவர் நன்றி தெரிவித்தார்.