கோயில் கொள்ளையை எதிர்த்து த.தே.கூ போராட்டம்

battiprotestமட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமை ஆகியவற்றை கண்டித்து மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.

கடந்ந ஜூன் மாதம் முதல் வாரம் ஓரே இரவில் இந்த பிரதேசத்திலுள்ள குருக்கள்மடம் மற்றும் மாங்காடு ஆகிய கிராமங்களிலுள்ள மூன்று இந்து ஆலயங்கள் அடையாளந்தெரியாத ஆட்களினால் உடைக்கப்பட்டு, இரு ஆலயங்களில் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு, கொள்ளைகளும் இடம்பெற்றுள்ளன.

குறித்த சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு மாதங்கள் கடந்து விட்ட போதிலும் சம்பவங்களுடன் தொடர்பான சந்தேக நபர்கள் எவரும் இதுவரை காவல் துறையினரால் அடையாளம் காணப்படவும் இல்லை, கைது செய்யப்படவும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

சம்பவத்துடன் தொடர்பான சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு, கைது செய்ய வேண்டும் எனபதே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் நோக்கம் என்றும் காவல்துறையின் எழுத்து மூல அனுமதி பெறப்பட்டிருந்தாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.

மாங்காடு பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து குருக்கள்மடம் கதிர்காமப் பிள்ளையார் ஆலயம் வழியாக குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரை, பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அக்கிராம மக்களோ, ஆலய நிர்வாகிகளோ எதிர்பார்த்தவாறு கலந்து கொள்ளவில்லை.

நேற்று மாலை சீருடையிலும் சிவிலுடையிலும் வந்தவர்களினால் இந்த பேரணியில் கலந்து கொள்ளக் கூடாது என அச்சுறத்தல் விடுக்கும் வகையில் அறிக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, இராணுவ புலனாய்வுத் துறையினரே இந்த அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

பேரணி நடை பெறமாட்டாது என்றும் அப்படி நடந்தால் கிராம மக்கள் கலந்து கொள்ள கூடாது என்றும் ஆலய ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்குமாறும் ஆலய நிர்வாகிகள் வற்புறத்தப்பட்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

மாவட்ட இராணுவக் கட்டளை அதிகாரியை தொடர்பு கொண்டு அவரது கவனத்திற்கு இதனை கொண்டுவரவிருந்த போதிலும், அவர் மாவட்டத்திற்கு வெளியே சென்றிருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கி. துரைராஜசிங்கம், இரா. துரைரெத்தினம் , பிரசன்னா இந்திரக்குமார் , த. கலையரசன் , மு. இராஜேஸ்வரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இராணுவம் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை இராணுவத் தரப்பு மறுத்துவிட்டது. -BBC

TAGS: