தடுப்பில் உள்ள போராளிகளை விடுவிப்பதாக கூறியும், மிரட்டியும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை ஒன்றினை மஹிந்த அரசு தயாரித்து வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் கொழும்பு வரவுள்ள நிலையில் அவருக்கு விடுதலைப்புலிகளின் போர்க்குற்ற அறிக்கை ஒன்றினை புதிதாக வழங்கவும், பொது நலவாய தலைவர்களின் மா நாட்டில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுமே இந்த வாக்கு மூல அறிக்கை தயாராகி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே இன்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் ; முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பிரதேசத்தில் இயங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா என்று அழைக்கப்படும் இரு சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஜெயரத்னம் மற்றும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி உள்ளடங்கலான 80 தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்து எரித்தனர் என்பதே அந்த அறிக்கையாகும்.
கொழும்பு மாவட்டத்தின் கல்கிஸ்ஸை பொலிஸ் வலய பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஜெயரத்னம் வெள்ளை வேனில் சிலாபம் நோக்கி கடத்திச் செல்லப்பட்டு படகு ஒன்றின் மூலம் மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புலிகளின் சிறையில் அடைக்கப்பட்டாராம், பின்னர் இவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30 பேர் 2006 ஆம் ஆண்டு மே மாதம் கைவிலங்கிட்ட நிலையில் லொறிகளில் எற்றப்பட்டு ஒட்டுசுட்டான் காட்டில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனராம்.
பின்னர் அதே ஆண்டு ஜூலை மாதம் அதே சிறையிலிருந்த 50 பேர் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனராம் இதுவே அந்த தயாரிப்பு அறிக்கையாகும்.
புலிகளால் 80 பணயக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டதாக, முன்னாள் போராளி ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 2006ம் ஆண்டு 80 பணயக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டதாக, முன்னாள் போராளி ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனை இலங்கையின் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டு மே மாதம் 30 பேரும், ஜுலை மாதம் 50 பேரும் இவ்வாறு கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் சிலரும் உள்ளடங்குவதாக அவரது வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதிகளில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களையும் குறித்த போராளி அடையாளம் காட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லப்பட்டவர்களில் கொழும்பில் இருந்து விடுதலைப்புலிகளால் புத்தளம் மன்னார் ஊடாக கடத்திச் செல்லப்பட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரியான ஜெயரட்ணமும் அடங்குவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.