நாட்டைப் பிளவுபடுத்தி எல்லைகளை வகுக்க முற்படுவோரின் கனவுகள் நிறைவேற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நாட்டின் அபிவிருத்திக்கு நங்கூரம் போடப்பட்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்.
நாட்டின் வரைபடத்தை மாற்றியமைக்க இனியும் இடமளிக்க முடியாது என தெரிவித்த ஜனாதிபதி நாட்டில் ஒரே வரைபடமே உள்ளது எனவும் தெரிவித்தார்.
400 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
மக்களுக்காக கடந்த சில வருடங்களில் நாம் பெற்றுக்கொடுத்துள்ள வளங்களில் கொழும்பு தெற்குத் துறைமுகம் முக்கியமானது. இந்த துறைமுகம் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க துறைமுகமாக முன்னேறியுள்ளது.
இந்த துறைமுகம் மூலமே கொழும்பு இலங்கையின் தலைநகரமாக மாறி நாட்டின் பொருளாதார கேந்திர மையமாக உருவெடுத்துள்ளது.
பறங்கி, ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்ட பின் இலங்கையர்களால் இந்து சமுத்திரத்தை வெற்றி கொள்ள வாய்ப்பிருக்கவில்லை. இதேபோன்று அன்றைய ஆக்கிரமிப்பைப் போன்றே பயங்கரவாதிகள் எமது இறைமையை அபகரிக்க முடிந்ததும் எமது கடலை எம்மால் முழுமையாக நிர்வகிக்க முடியாமற் போனமையே காரணமாகும்.
இலங்கையை மீண்டும் தோல்வியைத் தழுவாத நாடாகவும் உலகில் முக்கிய நாடாகவும் கட்டியெழுப்ப வேண்டுமெனில் துறைமுகத்தை மையமாகக் கொண்ட பொருளாதார முறைமை கட்டியெழுப்பப்பட வேண்டியது முக்கியமாகும்.
அதேபோன்று இலங்கையின் பெறுமதியை அனைத்து மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் கடலை வெற்றி கொள்வது முக்கியமாகும். அதனால்தான் நாம் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை முன்னேற்றும் கொள்கையில் துறைமுகம் மற்றும் கடற்பரப்பை கேந்திரமாகக் கட்டியெழுப்ப தீர்மானித்தோம்.
பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டை மீட்க முடியும் என நாம் நினைத்திருக்கவில்லை. நாட்டின் எதிர்காலம் குறித்து இந்தளவு தீர்க்கமாக எந்த தலைவரும் சிந்தித்திருக்கவுமில்லை.
அன்றிருந்தவர்கள் தம்மை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டு புலிகளிடமிருந்த துறைமுகங்களையும் கப்பல்களையும் மீட்பது சம்பந்தமாகவே சிந்தித்தனரே தவிர துறைமுகம் அமைப்பது பற்றியல்ல.
விமான நிலையங்களைப் பாதுகாப்பது எப்படி என சிந்தித்தார்களே தவிர புதிதாக எதையாவது உருவாக்கலாம் என சிந்திக்க நேரம் இருக்கவில்லை. எதிர்கால எதிர்பார்ப்புகள், அபிவிருத்திகள், அபிலாஷைகளுக்கு நங்கூரம் போடப்பட்டிருந்த யுகம் அது.
எனினும் நாம் நாட்டின் அபிவிருத்திக்கு நங்கூரம் போட்டிருந்த போது இந்து சமுத்திரத்தை அண்டியுள்ள ஏனைய நாடுகள் துறைமுகங்களை கட்டியெழுப்பி எம்மையும் முந்திக்கொண்டு முன்னேறிச் சென்றன.
2005 ல் நாம் துறைமுகங்களை கட்டியெழுப்ப தீர்மானித்தோம். தற்போது நாம் உலக அளவில் உயர்ந்து நிற்கின்றோம். நாம் ஐந்தே வருடங்களில் கொழும்பு தெற்கு துறைமுகத்தை நிர்மாணித்துள்ளோம்.
இந்த துறைமுகத்தில் உலகில் இப்போதுள்ள மிகப்பெரிய கப்பலும் எதிர்காலத்தில் அமைக்கப்படும் பாரிய கப்பல்களும் இந்த துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முடியுமான வகையில் பிரமாண்டமாக இத்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.