தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் சட்டத்தரணி சயந்தனுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் திகதியான கடந்த மாதம் 29ம் திகதி மூன்று முறை மீசாலையிலுள்ள சட்டத்தரணி சயந்தனின் வீட்டிற்கு சென்ற சீருடை தரித்த இராணுவத்தினர் அவரது தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை அவரது தாயாரிடம் பெற்றுச் சென்றதாகவும் அச்சுறுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸார், தேர்தல்கள் ஆணையாளர், சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் இதுவரை நான்கு சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இவை தொடர்பாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றிலும் அறிக்கையென்றையும் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு நேற்று முன்தினம் சாவகச்சேரி நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அச்சுறுத்தலை ஏற்படுத்தியது தொடர்பாக இராணுவத்தினரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ள பொலிஸார் நீதிமன்றிடம் கால அவகாசம் கோரினார்கள்.
இதன்அடிப்படையில் இராணுவத்தினரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ள பொலிஸாரிற்கு நீதிவான் உத்தரவிட்டதோடு, இவ்வழக்கினை எதிர்வரும் செம்டம்பர் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.