கிரான்ட்பாஸ் மசூதி மீது தாக்குதல்: இரு பொலிஸார் உட்பட 8 பேர் காயம்

grandpass_masoothy_001கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மசூதி மீது சுமார் 100 பேர் வரையிலான பௌத்த அடிப்படைவாத குண்டர்களால் நேற்றுமாலை தாக்குதல் நடத்தப்பட்டது.

கிரான்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள மாடிக்கட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மசூதி மீது, தொழுகை முடிந்த பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது, அருகிலுள்ள வீடுகள் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் மசூதிக்குப் பாதுகாப்பு வழங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அப்பிரதேசத்தில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் நேற்றிரவு தொடக்கம் இன்று காலை 7 மணிவரையும் கிரான்ட்பாஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது ஊடரங்குச்சட்டம் கைவிடப்பட்டு அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மீண்டும் திறக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலுக்கு நேற்று நண்பகல் முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் பொலிசாரின் காவலையும் மீறியே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், அமைச்சர் மேர்வின் சில்வா, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.

TAGS: