பிரிவினைவாதத்தினை தோற்றுவிக்க முயற்சிப்பவரே நவநீதம்பிள்ளை! பொதுபலசேனா தேரர் தெரிவிப்பு

podupalasena_pillai_001உண்மைக்குப் புறம்பானவற்றை உலகுக்கு எடுத்துக்கூறி பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதற்கு கடும் முயற்சி எடுத்து வருபவரே ஐநா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை. எனவே அவரை ஒரு உண்மையான, நடுநிலையான இராஜதந்திரியாக ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை யுத்தத்திற்குப் பின்னரான வடகிழக்கு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமானதும், நடுநிலையானதுமான அறிக்கை ஒன்றினை ஐநாவுக்கு சமர்ப்பிப்பார் என்பதை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் உண்மையை திரிவுபடுத்தி இலங்கைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்தவரே நவநீதம்பிள்ளை.

எனவே அவரின் அவ்வாறான செயற்பாடுகளினால் எமது நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் பங்கம் ஏற்பட்டது. ஆகையால் அவரின் வருகையால் நமக்கு நன்மை ஏற்படும் சாத்தியக்கூறுகள் இல்லை.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது நாட்டில் மீண்டும் ஒரு பிரிவினைவாதம் உருவாகுவதற்கு ஒருபோதும் இட்ம்கொடுக்கக் கூடாது. ஆனால் நவநீதம்பிள்ளை போன்றவர்கள் இலங்கைக்குள் பிரிவினைவாததத்தினை தோற்றுவிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

மூன்று தசாப்த காலமாக நாட்டு மக்கள் யுத்தத்தின் பிடிக்குள் சிக்கியிருந்தார்கள். வடக்கு கிழக்கு என்றில்லாமல் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் அதனால் பல்வேறு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வந்தார்கள்.

ஆனால் அவ்வாறான பிரச்சினைகள் இன்று இல்லாதுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படாத வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே தற்போதைய தேவையாக உள்ளது.

இன்று சில சர்வதேச அமைப்புக்களும் நவநீதம்பிள்ளை போன்றவர்களும் உண்மைகளை திரிவுபடுத்தி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் ஆனால் அவ்வாறான கருத்துக்களை கூறுகின்றவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எதனையும் செய்யவலில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

TAGS: