வட மாகாணசபைத் தேர்தல் தமிழ்மக்களின் மூன்றாம் கட்ட போராட்டம்!- கூட்டமைப்பு விளக்கம்

vikneswaran-150x125இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தியது.

வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது.

ஆயினும் தற்போது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு, வடமாகாணத்திற்குத் தனியாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது.

இந்த நிலையில் இந்த மாகாண சபையில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்பது குறித்த விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைபபின் நாடாளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராஜா, தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தவில்லை என்று கூறினார்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு இது ஒரு களமாக அமையும் என்ற காரணத்தினாலேயே இந்தத் தேர்தலில் பங்கு பெறுவதாகவும் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்,

அஹிம்சை வழி போராட்டம், ஆயுதப் போராட்டம் என்ற வகையில் மூன்றாம் கட்ட போராட்டமாக மாகாண சபைத் தேர்தல் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதப் போராட்டத்தின்போது, அது ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்று கூறி, சர்வதேசம் அதனை ஏற்கவில்லை என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தேர்தலின் மூலம், மக்களின் ஆதரவைப் பெற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டிருக்கின்றோம் என்பதை சர்வசேத்திற்கு எடுத்துக் காட்டி அதன் ஊடாக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதற்காகவே இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

TAGS: