பள்ளிவாசல் தாக்குதல் விவகாரம்!- அரசாங்கமும், முஸ்லிம் அமைச்சர்களின் நிலையும்!

grandpass_masoothy_001இலங்கையில், தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையால் இரண்டு இரவுகளாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டது.

ஆனால் நேற்றும் அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரும் கலகத்தடுப்பு பொலிசாரும் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர்.

பழைய பள்ளிவாசலை புனரமைக்கும் நோக்கோடு, அதன் அருகில் இருந்த அரச மரத்தை வெட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் பள்ளிவாசலை தாக்கியவர்களை கைதுசெய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது.

பள்ளிவாசலை இனவாதிகள் தாக்கியதை இரண்டு தரப்புக்கிடையிலான மோதலாக அரசாங்கம் காட்ட முனைவதாக கொழும்பில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் பார்த்துக் கொண்டிருக்கும் படியாக தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாவிட்டால் இதேமாதிரியான தாக்குதல் இன்னொரு இடத்தில் தொடரக்கூடும் என்றும் ஹரின் பெர்ணான்டோ கூறினார்.

முஸ்லிம் தலைவர்கள் அரசின் பங்காளிகள்!- அமைச்சர் தினேஸ்

இதற்கிடையே, கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களுடனும் பௌத்த தரப்புடனும் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த மூத்த அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம், பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் ஏன் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.

பொலிசார் அவர்களின் கடமையை செய்து வருகிறார்கள். நாங்கள் மக்கள் வாழ்க்கையை பாதுகாக்கவும் அமைதியாக பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம் என்றார் அமைச்சர் தினேஸ் குணவர்தன.

கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கிய காரணத்தால் தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இன்று இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருப்போரே தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து தமது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்று வருவதாகவும் கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம், சிங்கள அமைச்சர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறினார்.

வெளியேறுவதால் எதுவும் நடக்காது!- அமைச்சர் ரிசாத்

இதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் தேவைகளைக் கருதியே தாம் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இனவாத கும்பல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்காதுள்ளமையைக் கண்டித்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்று சிலர் கூறுகின்ற கருத்துக்களை ஏற்க முடியாது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறினார்.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடக்கும் போது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அதனைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியும் சக முஸ்லிம் அமைச்சர்களுடன் சேர்ந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: