இலங்கை அரசு பிழையான பாதையில் பயணிப்பதை சொல்ஹெய்ம், லீகுவான்யூ கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன!

Suresh-Premachandranஇலங்கை அரசாங்கம் மிக பிழையான பாதையில் பயணித்துக் கொண்டு, தமிழர்களுக்கு அநீதிகளை தொடர்ந்தும் இழைத்துக் கொண்டிருப்பதை சர்வதேசம் சமகாலத்தில் உணரத் தொடங்கியிருப்பதன் வெளிப்பாடே எரிக் சொல்ஹெய்ம் மற்றும் லீகுவான்யூ போன்வர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்துவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும், இலங்கை அரசாங்கத்தின் போக்கு தொடர்பாகவும் எரிக்சொல்ஹெய் ம் மற்றும் லீகுவான்யூ போன்றோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு மத்தியஸ்தராகச் செயற்பட்டவர் எரிக்சொல்ஹெய்ம், அவர் நன்றாக அறிவார் தமிழ் மக்கள் எவ்வாறான ஒடுக்கு முறைக்குள் வாழ்கிறார்கள் என்பதை. அவரே குறிப்பிட்டிருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணைந்து சாத்வீக போராட்டங்களை நடத்த வேண்டும் என்று.

அவருடைய கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கின்றது. நாம் எமது உரிமைகளுக்காக போராடாத வரையில் எமக்கான உரிமை கிடைக்கப் போவதில்லை. மேலும் இலங்கை அரசாங்கம் எதனையும் மிகச் சுலபமாக தமிழர்களுக்கு வழங்கப் போவதுமில்லை. அதனையும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதே போன்று சிங்கப்பூர் நாட்டை உருவாக்கிய பெருமைக்குரியவர்களில் ஒருவரான லீகுவான்யூ கூறியிருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி ஒரு பௌத்த சிங்கள தீவிரவாதி அவரை திருத்த முடியாது. யுத்தம் நிறைவடைத்த போதும் வடகிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுவார்கள்.

அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட தேசத்தில் அடங்கி வாழ்பவர்கள் அல்ல என்று. இவரே இலங்கை போன்று சிங்கப்பூர் நாட்டை நான் உருவாக்க வேண்டும் என கூறியிருந்தார். இன்று அவரே இலங்கை போன்ற மோசமான ஒரு நாடு இல்லை. அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு இன அழிப்பு என்பதையும் இப்போது கூறிவிட்டார்.

எனவே சர்வதேசத்தில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்கள் இருவருடைய கருத்துக்கள் மூலம் இலங்கை அரசாங்கம் மிகவும் பிழையான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை புலப்படுத்தியிருக்கின்றது.

எனவே அரசாங்கம் தமக்குச் சாதகமாக கூறப்படும் கருத்துக்களை தூக்கிப் பிடிப்பதை விடுத்து அவர்களுக்கு எதிரான விமர்சனங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதனடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் இனிமேலாவது தீர்வு கொடுக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

TAGS: