கொழும்பில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

colombo_protestஇலங்கையில் வெலிவெரியவில் சிங்கள மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி, அதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகளினால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தலைநகர் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில், பொது எதிர்க்கட்சிகளின் ஐக்கியத்துக்கான சக்தி என்ற அமைப்பு இந்த போராட்டத்துக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துபவர்கள் ஊர்வலமாகச் செல்லக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தபோதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள், ஹில்ட்டன் ஹொட்டல் சந்திவரை சென்றுவிட்டார்கள்.

இருந்தபோதிலும் அவர்களை அங்கு பொலிஸார் தடுத்துவிட்டனர்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, திஸ்ஸ அத்தநாயக்கா, ரவி கருணநாயக்க ஆகியோரால் மகஜர் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

வெலிவெரியவில் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட உத்தரவிட்டது யார் என்பது அறிவிக்கப்பட வேண்டும், சுட்டவரைக் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அந்த மகஜரில் காணப்பட்டன. -BBC

TAGS: