ஸ்ரீலங்கா அதிபரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் கருணாவுடன் இணைந்து 6,000 சிங்களவர்களை குடியேற்றும் புது நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளார் .
வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, பிரதி பிரதம சங்கநாயக்கர் வண.எட்டம்பகஸ்கட சிறி கல்யாண திஸ்ஸ நாயக்க தேரர், ஆகியோரின் கூட்டுத் திட்டமிடலின் கீழ் வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என மேலும் அறியப்படுகிறது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், “நந்திமித்ரகம”, “நாமல்கம”, “செல்லிஹினிகம”, “பொகஸ்வெவ 1”, “போகஸ்வெவ 2” என்று ஐந்து கிராமங்கள் உருவாக்கப்பட்டு, சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
இவற்றில் நாமல் ராஜபக்சவின் பெயரில், “நாமல்கம” என்ற சிங்களக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சிங்களக் கிராமங்களில் 2229 குடும்பங்களைச் சேர்ந்த 6271 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு குடிநீர், மின்சாரம், வீதி, போக்குவரத்து, சுகாதார வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உதவிகளும் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தப் பகுதியைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு நாமல் ராஜபக்சவின் நாளைய இளைஞர் அமைப்பின் ஊடாக புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் சிறிது காலம் இப்படியே போனால் வட கிழக்கில் தமிழர்களுக்கு பதிலாக சிங்களவர்களே அதிகம் இருப்பார்கள் என்ற நிலை தோன்றவுள்ளது. இது மிக மிக ஆபத்தான ஒரு விடையம் ஆகும். ஆனால் இதனைப் பற்றி எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.