இலங்கையிலும் மதசகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி அதி வண. ஜோசப் ஸ்பிட்டேரி அவர்கள் இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்து கரிசனை வெளியிட்டிருக்கின்றார்.
வரலாற்று சிறப்பு மிக்க மடுமாதாவின் ஆடி மாதத் திருவிழா இன்று காலை திருப்பலிப் பூஜையுடன் நிறைவுபெற்றது.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஜோசப் ஸ்பிட்டேரி அவர்கள் மற்றும் அநுராதபுரம் ஆயர் நோபட் அந்த்ரானி ஆகியோர் கூட்டாக திருப்பலிப் பூஜை ஒப்புக் கொடுத்தனர்.
ஜனநாயகம் மேலோங்கியுள்ள நாடுகளிலும்கூட கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதற்காக, அவர்கள் மத ரீதியாக ஒடுக்கப்படுவதாகவும் பாப்பரசரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
மதங்கள் மீதான ஒடுக்குமுறை, மத சகிப்புத்தன்மையற்ற நிலை என்பவற்றின் ஊடாக, தீய சக்திகள் தலையெடுத்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மடுமாதாவின் வழிநின்று சகிப்புத் தன்மையுடன் இத்தகைய தீமைகளில் இருந்து விலகியிருந்து, அயலவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். -BBC
ஆயர் அவர்களின் ஆலோசனையை பரந்த நோக்குடன் சிந்தித்து அனைவரும் சுமுகமாக வாழ முடிவு எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் கிறிஸ்த்தவர்கள் மனித இயல்புக்கு மாறாக மற்ற சமயத்தவரை தற குறைவாக பேசியும் நடத்தியும் உள்ளார்கள். அப்படி செய்தது தவறு என்பதை உணர்ந்து தற்பொழுது அச்செயல்களுக்கு நிவாரணமும் பரிகாரமும் செய்கின்றனர் (குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்). தங்களது குறைபாட்டினை தைரியமுடனும் உண்மையுடனும் ஏற்றுகொள்கிறார்கள். அதனால்தான் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பல நாடுகளில் மற்ற சமயத்தை சேர்ந்தவர்களும் தத்தம் சமய நம்பிக்கையுடன் எவ்வித பிரச்சினையும் இன்றி சமத்துவத்துடன் வாழ முடிகிறது. அன்பு இல்லையேல் அனைத்தும் பொய் என்ற இயேசு பிரானின் போதனையை கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குள்ளே ஈர்த்து அதன்படி செயல்படவும் முனைகின்றனர். அந்த அன்பு ஆளும் உலகம் ஒரு நாள் கண்டிப்பாக வந்தே தீரும். நாம் ஒவ்வொருவரும் நம்மை அடுத்திருப்போரை (எந்த சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும்) அன்பு செய்ய முடிவெடுத்து செயல்படுத்துவோம். நமக்கு பின்னால் வரும் மனித இனம் கண்டிப்பாக சுகமாக வாழும். நாம் எல்லோரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.