காமன்வெல்த் மாநாடு: மன்மோகன் வருவார் என்று இலங்கை நம்பிக்கை

manmohan-singhகொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாக அதன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை அழைப்பதற்காக புதுடில்லி சென்றுள்ள பேராசிரியர் ஜீஎல் பீரீஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்தபோதே இதைத் தெரிவித்தார்.

ஆசியாவில் 24 ஆண்டுகளுக்கு பிறகு காமன்வெல்த் மாநாடு ஒன்று நடைபெறும் சூழலில், அந்த அமைப்பிலேயே அதிகமான மக்கட்தொகை கொண்ட நாடு என்கிற வகையிலும் இந்தியா அதில் கலந்து கொள்வதற்கான காரணங்கள் உள்ளன என்றும் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான இருதரப்பு உறவுகள் வலுவாக உள்ளதையும் அவர் அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் 53 நாடுகளில் இதுவரை யாரும் கொழும்பு மாநாட்டுக்கு வரப்போவதில்லை என்று கூறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

கனடா கூட அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் என்று காமன்வெல்த் அமைப்புக்கான கனடாவின் சிறப்புத் தூதர் ஹ்யூ சீகல் தெரிவித்துள்ளதையும் பேராசிரியர் பீரீஸ் சுட்டிக்காட்டினார்.

நவி பிள்ளையின் வருகை

ஒருவார கால பயணமாக இலங்கைக்கு வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையின் விஜயம் ஆக்கபூர்வமாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னரே அவரை இலங்கைக்கு வருமாறு அரசு அழைத்தது என்றும், இந்தப் பயணம் அவருக்கு இலங்கை குறித்த ஒரு யதார்தமான, ஆக்கபூர்வமான புரிதலோடு ஒரு நிலைப்பாட்டை எடுக்க உதவும் என்றும் தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“கச்சத்தீவு-தவறான புரிதல்”

இலங்கையைப் பொருத்தமட்டில் கச்சத்தீவு ஒரு முடிந்துபோன விஷயம் என்றும் அதன் வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்.

இந்த விஷயத்தில் இந்தியா தனது நிலப்பரப்பை விட்டுக் கொடுத்துள்ளது என்பது ஒரு தவறான புரிதல் என்றும் கூறுகிறார் ஜி எல் பீரிஸ்.

அது சர்வதேச கடல் எல்லையை குறிக்கும் ஒரு விளக்கத்தின் கீழ் இருநாட்டு பிரதமர்களிடையே எடுக்கப்பட்ட உறுதியான, இறுதியான முடிவும் என்று கூறும் அவர், அந்த உடன்பாட்டில் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்வது, மீன்பிடி வலைகளை காயப்போடுவது ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் கூறுகிறார்.

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோன் சிங்கை அவர் திங்கட்கிழமை காலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: