இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியா இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்ப வேண்டும் என்றும், மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் கட்டாயமாக தலையீடு செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வந்துள்ள நிலையில், அவரிடம் இந்திய மத்திய அரசாங்கம், மனித உரிமை நிலவரங்கள், யுத்த குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதி மொழிகளை தொடர்ச்சியாக மீறி வருகிறது.
யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இதுவரையில் இலங்கையில் நடைபெறகின்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரசாங்கத்தினால் மறைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்படுகின்ற இலங்கை மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில், இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் போரின் போதும், போர் நிறைவடைந்த பின்னரும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். எனினும் அந்நாட்டின் ஆணைக்குழு விசாரணைகளில் நம்பிக்கை செலுத்த முடியாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் போரின் போதும், அதன் பின்னரும் ஏராளாமானோர் கொல்லப்பட்டது, அங்குள்ள மக்களின் ஒரு பிரிவினர் ஒடுக்கப்படுவது, மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பிரச்னைகளை இந்தியா எழுப்ப வேண்டும்.
இலங்கையின் நிகழ்வுகள் குறித்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகத்தன்மையும், சுதந்திரமும் உள்ள அமைப்பு மூலம் விசாரணை நடைபெற வேண்டியது அவசியம்.
இது விடயத்தில் இலங்கை அரசு தாங்கள் உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.