கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் பெண்கள் அமர்ந்து பயணம் செய்யும் முறை தொடர்பாக பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் தற்போது சர்ச்சை தோன்றியுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் பெண்கள ஏற்கனவே பல வருடங்களாக தங்கள் இரு கால்களையும் இடது பக்கமாக வைத்து பயணம் செய்து வருகிறார்கள்.
ஆனால் தற்போது காவல்துறை அவ்வாறு பயணம் செய்வது போக்குவரத்து விதிகளை மீறும் செயல் என கூறி, இரு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டு பயணம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
காவல்துறையின் இந்த அறிவுறத்தல்களை பின்பற்ற தவறிய நூற்றுக்கணக்காண மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது சட்ட நடவடிக்கைகளும் காவல் துறையினரால் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 25-30 வருடங்களாக காவல்துறையால் நடைமுறைப்படுத்தப்படாத இந்த புதிய நடைமுறையானது, தமது கலாச்சாரத்திற்கு பொருத்தமானதாக இல்லை என பெண்கள் அமைப்புகள் கூறுகின்றன.
சேலை அணிந்து பயணம் செய்யும் தமிழ் பெண்கள் அபாயா அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் இந்த நடைமுறையினால் மோட்டார் சைக்கில் பயணத்ததை தவிர்த்துக்கொள்ளும் நிலையில் தற்போது உள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் உயர்மட்ட கூட்டமொன்று கூட்டப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள மற்றும் சிவில் அதிகாரிகள் உட்பட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் அமர்ந்து செல்லும் பயணிகள் இருபக்கமும் கால்களை போட்டு பயணம் செய்ய வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறைகளில் பெண்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று காவல்துறையைக் கோரும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.
”வழமைபோல் பெண்கள் ஓரே பக்கமாக இரு கால்களையும் வைத்தவாறு பயணம் செய்ய அனுமதிப்பதோடு அதற்கு பாதுகாப்பான மாற்று வழிமுறைகளை காவல்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஏற்கனவே நீதிமன்றத்தில் இவை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்ற மற்றுமொரு தீர்மானமும் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தங்களால் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானங்கள் பிரதி காவல்துறை மா அதிபரிடம் எழுத்து மூலம் முன் வைக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். -BBC