தமிழர்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு யாரும் ஒதுங்கி விடவேண்டாம். எமக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மீளவும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் த.தே.தேசிய கூட்டமைப்பை வடக்கு மாகாணசபை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்யுங்கள் என கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.வட்டுக்கோட்டை, மூளாய், சுழிபுரம் கிராமங்களில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்புக்களின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்புக்களின்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மாகாணசபை முறைமையின் மூலம் செய்ய முடிந்த கடமைகளைச் செய்வதற்கும் கூட நாம் அமோக வெற்றி பெறவேண்டியதாக இருக்கின்றது. ஏனெனில் அனைத்துமே ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.
நாங்கள் முன்னகர முடியாதவாறு சட்டங்கள் உள்ளன. அத்தகைய இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு நாம் எமது கடமைகளைச் செய்ய எமக்கு அமோக மக்கள் ஆதரவு அவசியம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தானே வெற்றி பெறப்போகின்றது. பிறகேன் வாக்களிக்க வேண்டும் என எமது மக்கள் பலர் வாக்களிக்காமல் இருந்து விடுகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறும் என்பது தெரியும். ஆனால் வெற்றி என்பதற்கு அப்பால் நாம் அமோக வெற்றி பெறவேண்டும்.
அது ஒன்றே உலகத்திற்குப் பல செய்திகளைச் சொல்லிவிடும். அதற்காகவே நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழர்களின் போராட்டத்தின் 3ம் கட்டத்தின் ஆரம்பமாக மாபெரும் எழுச்சியாக உலகத்திற்குச் சொல்லவேண்டும், காட்டவேண்டும். நாம் கல்வியில், பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்தவர்கள். இன்று எல்லாவற்றையும் இழந்துவிட்டோமே என்று யாரும் ஒதுங்கிக் கொள்ளவேண்டாம்.
தமிழர்கள் நாங்கள். எமக்கு ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். இழந்தவைகளை மீளவும் உருவாக்கி எழுச்சி பெறுவோம். மக்கள் வாக்களிக்காமல் இருக்கும் தருணத்தில் வேறு ஒருவர் அந்த இடத்தில் கள்ள வாக்கு அளிக்கிறார். தற்போதும் அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஓவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். எத்தனைபேர் வெளி ஊரில் இருக்கிறார்கள் என்பது இராணுவத்திற்குத் தெரியும்.
அவர்களுக்கு அந்த விடயம் தெரிய வந்தால் அடுத்ததாக என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே எங்களுடைய சின்னச் சின்னத் தவறுகள் ஒரு இனத்தின் எதிர்காலத்தை பாதிப்பதாக அமைந்துவிடக் கூடாது.
எனவே ஒட்டுமொத்த மக்களும் சென்று வாக்களியுங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றியல்ல அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.