இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இந்த மாதம் 30ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்கவுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி இலங்கை வரவுள்ள நவநீதம் பிள்ளை 30ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, வடமாகாணத்தில் நடைமுறையிலுள்ள அதிகரித்த இராணுவ துருப்பினரை வெளியேற்றுவது தொடர்பில் பேசப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இன்னும் பொது மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ளமை, கடத்தல் மற்றும் காணாமல் போனோர் சம்பந்தமான விடயங்கள் என்பன குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையிடவுள்ளது என்று கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக நவனீதம்பிள்ளையிடம் அரசாங்கம் முறைப்பாடு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் அரசாங்கம் முறைப்பாடு செய்ய உள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இதன் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும், அதனை நவனீதம்பிள்ளையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
வன்னியிலிருந்து மீட்கப்பட்ட வீடியோ ஆவணங்களில் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
புலிகளின் உத்தரவிற்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்ய உள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச் செயல்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய்ப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.