மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் மேற்கு எல்லை கிராமங்களிலுள்ள அரச காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ள வெளி மாவட்டத்தவர்களை வெளியேற்றக் கோரி இன்று புதன்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
அம்பாறை-மஹாஒயா நெடுஞ்சாலையிலுள்ள கச்சைக்கொடி கிராம சேவை அலுவலர் பிரிவிலுள்ள கெவுலியாமடு மற்றும் புழுகனாவ ஆகிய இந்த கிராமங்களில் வெளி மாவட்ட சிங்களவர்களை குடியேற்றம் செய்வதற்காக பௌத்த பிக்கு ஒருவரால் முன்னெடுக்கப்படும் இந்த செயல்பாடுகளுக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.
பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
குறித்த கிராமங்களின் அரசாங்க காணிகளில் ஏற்கனவே சில நிரந்தர வீடுகளும் சில குடிசைகளும் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதோடு புதிதாக மேலும் சில நிரந்தர வீடுகளுக்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.
ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இந்த நடவடிக்கைகளில் பௌத்த பிக்கு ஈடுபட்டு வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த போராட்ட முடிவில் பிரதேச செயலாளரிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டது.
‘அத்துமீறி அரசாங்க காணிகளை அபகரித்திருப்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டில்களும் நிரந்தர கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும். அரசாங்க காணிகளில் சட்ட விரோதமாக அபகரிப்பு இடம் பெறுமானால் அதனை தடுக்க வேண்டியதும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதும் பிரதேச செயலாளரின் கடமை’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போராட்டம் முடிந்த பின்னர் , குறித்த காணிகளில் குடியேற அனுமதி கோரும் வகையில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் ஒரு தொகுதி சிங்களவர்கள் சகிதம் பிரதேச செயலாளரை சந்தித்து அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. -BBC