இராணுவம் ஒரு கொலைகார இயந்திரம் அல்ல. அவ்வாறு நினைப்பது ஒரு பிழையான நோக்காகும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வொய்ஸ் ஒப் ரஸ்யாவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட பல அமைப்புக்கள், இராணுவத்தை பயன்தரு வழிகளில் பயன்படுத்தும் வழிகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக கட்டிட நிர்மாணம் உட்பட்ட பல பணிகளுக்கு இராணுவத்தை அந்த அமைப்புக்கள் பயன்படுத்தி வருகின்றன.
அதேநேரம் பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இராணுவம் பயன்படுத்தப்படுகிறது.
இதேவேளை இலங்கை அரசாங்கம் வடக்கில் இருந்து மேலும் இராணுவ பிரசன்ன அளவை குறைக்கவேண்டியுள்ளது.
எனினும் அது கட்டம் கட்டமாக இடம்பெறும் என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இருந்து படையினரை குறைக்கும் அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள நிலைமைகளை கருத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.
எனவே அதற்கு ஏற்றாற்போல் வடக்கில் இருந்து இராணுவ பிரசன்ன அளவை குறைக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.