நவநீதம்பிள்ளை ஈழத் தமிழர்களின் துயரம் குறித்து ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!- கருணாநிதி வலியுறுத்தல்

karunanidhiஇலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம்பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை இந்த மாத இறுதியில் இலங்கை செல்லவிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

டெசோ சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்றது.

இதில் ஈழ விவகாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை ஜெனீவாவுக்கு நேரில் சென்று நவநீதம்பிள்ளையிடம் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சென்று கையளித்தனர்.

மேலும் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் அப்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பே, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான நவநீதம்பிள்ளையே 38 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையைத் தயாரித்து அளித்தார்.

இந்நிலையில் நவநீதம்பிள்ளை இலங்கைக்குச் செல்கிறார்.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்துவதற்கு முன்பே அங்கு திட்டமிட்டு முறைகேடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கான நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை.

இவற்றையெல்லாம் சரிசெய்து, இலங்கையில் அடிப்படை ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சியினை நவநீதம்பிள்ளை மேற்கொள்வார் என உலகத் தமிழர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.

எனவே, இலங்கை செல்லும் நவநீதம்பிள்ளை ஈழத் தமிழர்களின் துன்பங்களையெல்லாம் நேரில் அறிந்து, ஐ.நா.முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரியுள்ளார்.

TAGS: