உலகத்தில் விடுதலை பெற்ற நாடுகளின் வரலாற்றில், ஆயுதம் தாங்கிப் போராடிய நாடுகளின் வரலாறுகளையும் அதற்குள் நாம் பார்க்க முடியும். அந்த அடிப்படையில் ஆயுதப் போராட்டப் பாதையில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் சில இராஜதந்திர தவறுகளால் அந்தப் பாதை பிழைத்துவிட்டது. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளே தமிழர்களை, தமிழர்களுடைய பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தியிருக்கின்றது.
எனவே மிகச் சரியான இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எங்கள் அரசியல் உரிமைகளை ஜனநாயக வழியில் பெற முயற்சிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்.சாவகச்சேரி பிரதேசத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் கிளை அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது முதன்மை வேட்பாளராக சிறந்த கல்விமானை, சர்வதேசத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடிய ஒருவரை சீ.வி.விக்னேஸ்வரனை நாங்கள் நியமித்திருக்கின்றோம். அவருக்கு மக்கள் அமோக ஆதரவினை வழங்கவேண்டும்.
யுத்தம் நிறைவடைந்து 4வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அதனை நாங்கள் கண்டும் காணாமல் இருப்பதாக சொல்லப்படுவது உன்மையற்றது. நாங்கள் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறோம்.
ஆனால் நாங்கள் எதனையும் செய்ய முடியாத நிலையில் அரசாங்கம் எம்மை வைத்திருக்கின்றது. நிச்சயமாக அந்த மக்களுடைய நலன்சார்ந்த விடயங்களை நாங்கள் கவனிப்போம்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும். சர்வதேச நீதிபதிகளால் இந்த விடயம் விசாரிக்கப்படவேண்டும் என நாங்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றோம்.
எங்கள் மக்களுடைய இழப்புக்களுக்கு நியாயம் கிடைக்கப் பெறவேண்டும். அதேபோன்று விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, கடல் வளம் சுரண்டப்படுகின்றது. 25வருடங்கள் வலி,வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் மக்களுடைய நிலங்களில் இராணுவத்தினர் விளையாடுவதற்காக கோல்ப் மைதானங்களும், உல்லாச விடுதிகளும் கட்டப்படுகின்றன. இராணுவம் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற நிலையே இன்றும் இருக்கின்றது. 2010ம் ஆண்டில் இருந்த நிலையினைக் காட்டிலும் கடந் த 4வருடங்களில் நிலமை மிகவும் மோசமாகியிருக்கின்றது.
யுத்தத்தில் உயிர்களையும், உடமைகளையும் அழித்ததது மட்டுமல்லாமல், இப்போது எங்கள் தனித்துவங்களையும், அடையாளங்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் உண்மையான நிலைப்பாடு என்னவென்றால் இலங்கையை குறிப்பாக தமிழர் பகுதியை பௌத்த மயமாக்கி, பின்னர் இராணுவ மயமாக்கி அதன் பின்னர் சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சியே நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.
அய்யா நவநீதன்பிள்ளைக்கு ஆதரவும் பாதுகாப்பும் தரவும்.நவநீதம் பிள்ளை சோகம் மாநாட்டில் சிறப்பு பேராளராக கலந்து 54 நாட்டு தலைவர்களுக்கு புத்தி சொல்லும் இலங்கை மனித உரிமை மற்றும் தமிழ் ஈழ மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்க ஐநாவை தயார்படுத்த செய்யுங்கள்.அவர் வருகையின் நோக்கங்கள் வெற்றி பெற செய்வோம்.நன்றி, உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மலேசியா.
அர்த்தமுள்ள கட்டுரை.உலகதமிழர்கள் உணரவேண்டும் குறிப்பாக தமிழ் நாட்டு தமிழர்கள் (காங்கிரஸ் ) உணரவேண்டும்.