இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க நேற்று அங்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க முதல் முறையாக நேற்று முல்லைத்தீவுக்குச் சென்றார்.
அவர் முல்லைத்தீவுப் படைத்தலைமையகம், புதுக்குடியிருப்பில் உள்ள 68வது டிவிசன் தலைமையகம், ஒட்டுசுட்டானில் உள்ள 64வது டிவிசன் தலைமையகம், வெலிஓயாவில் உள்ள 59வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்றுக்குச் சென்று படையினருடன் கலந்துரையாடியதுடன், ஆயிரக்கணக்கான படையினர் மத்தியிலும் உரையாற்றியுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு, இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் தடயங்களை அழிக்கும் முயற்சிகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், போரின் தடயங்களை நவநீதம்பிள்ளையிடம் இருந்து மறைக்கும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும், படையினர் மத்தியில் இவரது பயணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கிலுமே இராணுவத் தளபதி முல்லைத்தீவுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின் போது, முல்லைத்தீவில் உள்ள படை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய புதிய இராணுவத் தளபதி, இன்று நவநீதம்பிள்ளை செல்லவுள்ள பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பொதுமக்கள் சிலரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.