சென்றார் நவி பிள்ளை, மீண்டும் வந்தது இலங்கை இராணுவம்

sri_lanka_refugee_campஐநா மனித உரிமைகளுக்கான ஆணையர் நவிப்பிள்ளை அவர்கள் வடபகுதிக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தையடுத்து, முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட இலங்கை இராணுவத்தினர் புதனன்று மீண்டும் வீதிகளில் தமது கடமைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவிப்பிள்ளை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும், அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்த வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ காவலரண்கள் உரு மறைப்பு செய்யப்பட்டும் சில காவலரண்கள் முற்றாக அகற்றப்பட்டிருந்தன.

எனினும், புதனன்று, இந்த காவலரண்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதியூடாக நவிப்பிள்ளை பிரயாணம் செய்ததையடுத்து, மூடப்பட்டிருந்த ஆனையிறவு வீதிச் சோதனை முகாமும் புதனன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆனையிறவின் வழியாகச் செல்கின்ற வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைககளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக பயணிகளும் வாகன ஓட்டுநர்களும் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிராமத்திற்குச் சென்றிருந்த நவிப்பிள்ளையிடம் மீள்குடியேற்றப்பட்டுள்ள தங்களுக்கு இன்னும் வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், சில இடங்களில் தமது வயல் மற்றும் தோட்டக்காணிகள் படையினரால் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து, அவற்றைத் தங்களுக்கு பெற்றுத் தருமாறும் அந்த மக்கள் கேட்டுக்கொண்டனர்.

தென்னிலங்கையில் இருந்து தமது பகுதிக்குள் வந்து தொழில் செய்கின்ற வெளிமாவட்ட மீனவர்களினால், மீன்பிடி தொழிலில் தாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் நவிப்பிள்ளையிடம் தெரிவித்தனர்.

இறுதி யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அங்குள்ள மக்கள் அவரிடம் எடுத்துக் கூறினார்கள்.

நவிப்பிள்ளையைச் சந்தித்த மக்கள் புதனன்று அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. -BBC

TAGS: