இலங்கையில் சிலாபத்தில் உள்ள முன்னீஸ்வரம் பத்ரகாளி ஆலயத்தில் மிருக பலி கொடுப்பதை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ள இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய சங்க சம்மேளனம் என்னும் அமைப்பு உட்பட சில பௌத்த அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.
தகுந்த அனுமதியைப் பெறாமல் மிருக பலி யாகத்தை இந்த ஆலயம் செய்வதனால், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான சட்டம் மீறப்படுவதாகக் கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான பொதுச் சட்டம் இதனால் மீறப்படுவதாக தீர்ப்பளித்தது.
எந்தவொரு சமயத்தை பின்பற்றுவதற்கு நாட்டில் உள்ள பிரஜைகளுக்கு உரிமை இருப்பதாகக் கூறிய நீதிபதி சிசிர டீ ஆப்ரு, ஆனால், அதற்காக பொதுச்சட்டங்களை மீறமுடியாது என்று கூறினார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து ஆராய்வதாக ஆலயத்தின் சார்பிலான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். -BBC