“உங்கள் பிள்ளைகளை அனுப்பிய இடத்திற்கே உங்களையும் அனுப்புவதா” ? சிறிலங்கா படையினர் அச்சுறுத்தல்!

Navaneetham-pillay2இலங்கைத்தீவுக்கு பயணத்தினை மேற்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அம்மையார் அவர்களிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பலர் ,சிறிலங்கா படையினராலும் புலனாய்வாளர்களினாலும் அச்சுறுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அவசரக் கோரிக்கை வெளிவந்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவிப் பிள்ளை அம்மையார் அவர்களிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் ஐ.நா ஆணையாளிரடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தவர்களை இனங்கண்டு, சந்திப்பு மறுநாள் அவர்களின் வீடுகளுக்கு சென்ற சிறிலங்காவின் படையினரும் புலனாய்வாளர்களும்” உங்கள் பிள்ளைகளை அனுப்பின இடத்துக்கே உங்களையும் அனுப்புவதா” என அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஐ.நா ஆணையளரின் உடனடிக் கவனத்திற்கு இவ்விவகாரத்தினை கொண்டு சென்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போரின் வலிகளைச் சுமந்து நிற்கும் அம்மக்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

குறிந்த நாளில் சிறிலங்காப் படையினரும், சாதாரண உடையில் காணப்பட்டதால், பேசத் தயங்கிய மக்களை, தனக்கு அருகில் அழைத்தே ஐ.நா ஆணையாளர் அம்மக்களின் விபரங்களை கேட்டறிந்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கட்டாயத்தின் பேரில் மீள்குடியேற்றப்பட்டிருந்த பொதுமக்கள் பலர் , தங்களுக்கு இன்னும் வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், சில இடங்களில் தமது வயல் மற்றும் தோட்டக்காணிகள் சிறிலங்கா படையினரால் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து, அவற்றைத் தங்களுக்கு பெற்றுத் தருமாறும்நவி பிள்ளை அம்மையாரிடம் மன்றாடியிருந்தனர்.

இதேவேளை தென்னிலங்கையில் இருந்து தமது பகுதிக்குள் வந்து தொழில் செய்கின்ற வெளிமாவட்ட மீனவர்களினால், மீன்பிடி தொழிலில் தாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் ஐ.நா ஆணையாளரிடம் தெரிவித்தனர்.

இறுதி யுத்தத்தின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அங்குள்ள மக்கள் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.

TAGS: