பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இருவருக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பௌதிக அபிவிருத்திகளுடன் சேர்த்து பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
அத்துடன், சிறுபான்மையினத்தவர்களின் மதஸ்தலங்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை அவசியமெனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவசியமான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடனான ஐ.நா. ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சந்திப்பை தொடர்ந்து அங்கு ஆராயப்பட்ட விடயங்களை ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு வெளியிட்டது.
அதில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தத்தின் பின்னர் இலங்கை பெற்றுள்ள வெற்றிகள் குறித்து ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் வடக்கு மற்றும் கிழக்குக்கான தனது விஜயத்தின் போதே புனர்நிர்மாணம், மீள்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்தவொரு பகுதிக்கும் சுதந்திமாக சென்றுவர ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு வழங்கப்பட்ட வசதி குறித்து இதன்போது ஜனாதிபதி அவரிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதியான உமது கவனத்தை பாராட்டுகிறேன் என பதிலளித்தார்.
இதனையடுத்தே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றினையும் கவனத்திற் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் நவிப்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வெற்றிகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டது தொடர்பிலும் காணாமல் போனதை குற்றமாக கருதி சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும் அவர் வரவேற்றுள்ளார்.
சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதொன்றல்ல என்றும் திடீரென நடைபெறும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையை நாட்டு மக்கள் பக்கசார்பானது என கருதுகின்றனர். உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்றென மக்கள் கருதுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை பரந்துபட்ட நிறுவனம் என்ற அபிப்பிராயம் பரவலாக மக்களிடம் காணப்படுவதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையானது சுதந்திரமானதாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
என்னுடைய அமைச்சரவையில் பல்வேறு கொள்கைகள்,சிந்தனைகளை கொண்ட குழுவினர் இருக்கின்றனர். எனினும் பொதுகொள்கையின் கீழ் அவர்களை வழிநடத்துவதற்கு தன்னால் முடிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணா திலக்க அமுனுகம, ஜெனீவாவிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.