இலங்கை எதேச்சதிகாரப் பாதையில் பயணிக்கிறது: நவி பிள்ளை

navaneethmpilaiஎதேச்சதிகார ஆட்சியை நோக்கி இலங்கை செல்வதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் மக்கள் இன்றளவும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும், எதேச்சதிகாரப் பாதையில் நாடு செல்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்தாலும் துன்பம் தீரவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் நவி பிள்ளை வலியுறுத்தினார்.

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் நாட்டின் பாதுகாப்பு பிரிவினரிடம் இருந்து துன்புறுத்தல்களுக்கு ஆளாகுதல் என்பது அதிகரித்து வருவதாகத் தெரிகிறது என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தான் மேற்கொண்ட உண்மை கண்டறியும் பயணத்தின்போது, தன்னிடம் பேசிய சில மனித உரிமை ஆர்வலர்கள் பிற்பாடு பொலிசாராலும் இராணுவத்தினராலும் தொல்லைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானதாக புகார்கள் வந்திருப்பது சற்றும் சகித்துக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

“என்னை இங்கே வரவழைத்துவிட்டு, இப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்யக்கூடாது. இலங்கையில் ஆட்கள் கண்காணிக்கப்படுவதென்பதும் துன்புறுத்தப்படுவதென்பதும் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. இங்கே அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்களை ஒரேயடியாக மௌனிக்கச் செய்யும் காரியங்களும் நடக்கின்றன.”

இதற்கிடையே எமது சிங்கள சேவையின் கொழும்புச் செய்தியாளர் அஸாம் அமீனுக்கு பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கிய பிள்ளை அவர்கள், திருகோணமலை மாணவர்கள் கொலை விவகாரம் மற்றும் மூதூர் அக்ஷசன்பெய்ம் படுகொலை விவகாரம் போன்றவை குறித்து சில இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக தனக்கு சட்டமா அதிபர் விளக்கியதாகக் கூறினார். அது குறித்து அவர் ஓரளவு திருப்தியும் வெளியிட்டார்.

இந்த விஜயத்தின்போது சில அரசாங்க அமைச்சர்கள் கூட உங்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தக்கூடிய சில கருத்துக்களை கூறியிருந்தார்களே என்று எமது செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த நவிபிள்ளை அவர்கள், மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில எம்பிக்கள் கூறிய கருத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் தான் எடுத்துச் சென்றதாகவும் மிகவும் மோசமான சில கருத்துக்களுக்காக இலங்கை ஜனாதிபதி தன்னிடம் வருத்தம் தெரிவித்ததை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஒருவார காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பலதரப்பட்ட மக்களையும் சந்தித்திருந்த நவி பிள்ளையின் இலங்கை விஜயம் நிறைவுக்கு வந்துள்ளது. -BBC

TAGS: