ஈழ இனப் படுகொலைப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு வந்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை. நவி பிள்ளையின் வருகை முடிவானதுமே, இறுதிப் போர் நடந்த பகுதிகளைக் கழுவித் துடைத்து எஞ்சிய தடயங்களையும் அழித்து அலங்கரித்தது இலங்கை இராணுவம்.
மக்கள் வாழ்விடங்களை ஆக்கிரமித்து நின்ற இராணுவத்தினர், மிகத் தற்காலிகமாக முகாம்களுக்குள் போனார்கள். ஏராளமான இராணுவத்தினர் மப்டி உடைகளில் நவிபிள்ளை வருவதற்கு முன்பும், வந்து சென்ற பின்னரும் மக்களை மிரட்டினார்கள்.
நவிபிள்ளையை, ‘புலிப் பிள்ளை’ என்றும், ‘பிரபாகரனின் சகோதரி’ என்றும் சிங்கள ஊடகங்கள் சில எழுதின.
இன்னொரு பக்கம், இலங்கையின் ‘ரவுடி’ அமைச்சர் மேர்வின் சில்வா, ‘சிங்கள விஜயன், வேட்டுவப் பெண்ணான குவேனியைத் திருமணம் செய்து கொண்டது போல, நான் நவநீதம்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்று சொன்னது வக்கிரத்தின் உச்சம்.
இதெல்லாம் நவிபிள்ளையை மனரீதியாகச் சோர்வுறச் செய்யும் சிங்களவர்களின் அரசியல்.
நான் இந்தியப் பாரம்பரியத்திலிருந்து வந்திருந்தாலும்கூட, தென் ஆபிரிக்கக் குடிமகள் என்று சொல்வதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். என் மீது ‘புலிகளின் பிரதிநிதி’ என்றும், ‘பணத்துக்காகச் செயல்படுபவள்’ என்றும் இழிவான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது மிக மோசமான தாக்குதல்” என்று சிங்களவர்களைக் கண்டித்த நவி பிள்ளை, ‘பல்லாயிரம் உயிர்களைக் கொன்றொழித்த இரக்கமற்ற அமைப்பு’ என்று விடுதலைப் புலிகளையும் விமர்சிக்கத் தவறவில்லை.
நவிபிள்ளையிடம் இராணுவத்தினர் தாங்கள் புதிதாக வேய்ந்த சாலைகளையும், சில கட்டடங்களையும் தயார்படுத்தி வைத்திருந்த ரெடிமேட் முகாம்களையும் காட்டினர்.
சமீபத்தில் கட்டிய ‘யாழ்’ வைத்தியசாலையை நவி பிள்ளையிடம் காட்டியபோது கடுப்பானவர், ”உங்கள் அரசுத் திட்டங்களின் அபிவிருத்திகளைக் காணவோ, அதன் அருமை பெருமைகளைக் கேட்கவோ நான் வரவில்லை. நான் மக்களைச் சந்திக்க வேண்டும். என்னை சுதந்திரமாக அனுமதியுங்கள். ஐ.நா-வால் எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளே எனக்குப் போதும். உங்களுடைய இராணுவப் பாதுகாப்பு தேவையில்லை” என்று காட்டம் காட்டினார்.
அதன் பின்னரே ஈழ மக்கள் நவி பிள்ளையிடம் தங்களின் மனக்குறைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.
சாலை, ரயில் பாதைகள், கோயில் கட்டடங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால், மீனவர்களும் விவசாயிகளும் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகள் இருக்கின்றன. ஆனால், அதில் வாழ முடியாத அளவுக்கு இராணுவக் கண்காணிப்பு இறுகியிருக்கிறது!” – சிங்களர்கள் அனுமதித்த இடங்களைப் பார்வையிட்ட பிறகு, நவி பிள்ளை சொன்ன வார்த்தைகள் இவை.
யாழ்ப்பாணத்தில் நவி பிள்ளையைச் சந்தித்த புலிகளின் தளபதி எழிலனின் மனைவி அனந்தியின் அனுபவம் இது…
இறுதிப் போரின் பின்னர் ப்ரான்சிஸ் ஜோசப் அடிகளாரின் தலைமையில் என் கணவர் எழிலனும், பல நூறு போராளிகளும் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற என் கேள்விக்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை என்று நவி பிள்ளையிடம் சொன்னேன். என்னைப் போல பல நூறு பெண்கள் தங்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக மனுக்களைக் கையளித்தனர். எங்கள் குறைகளைக் கனிவோடு கேட்டார். உரிய முறையில் தீர்வு காண்பதாகவும் சொன்னார்.
நவிபிள்ளை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, இலங்கை அரசு தற்காலிகமாக இராணுவத்தை அகற்றி இருக்கிறது. அவர் திரும்பிச் சென்றதும் மறுபடியும் இராணுவம் வந்துவிடும். ஆனால், இதை எல்லாம் நவி பிள்ளையிடம் சொல்வதற்கான கால அவகாசமோ, சூழலோ இல்லை என்கிறார்.
உலகெங்கிலும் நடைபெறும் போரில் உயிரிழப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது நவி பிள்ளை கடைப்பிடித்து வரும் பண்பு. வன்னிப் போரில் கொல்லப்பட்ட இராணுவத்தினர், புலிகள், பொதுமக்களுக்கு நந்திக் கடலில் அவர் அஞ்சலி செலுத்த விரும்பினார்.
இதை முன்கூட்டியே அறிந்துகொண்ட சிங்கள இராணுவத்தினர், ஐ.நா. அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ‘அப்படிச் செய்தால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம்’ என்று பயமுறுத்தி முல்லைத்தீவுக்குள் நவிபிள்ளையை அனுமதிக்க முடியாது என்று அச்சுறுத்தினார்கள்.
நவி பிள்ளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்தது அவரது வருகையில் குறிப்பிடத்தக்க அம்சம்.
இது பற்றி வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளரான விக்னேஸ்வரனிடம் பேசியபோது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நவிபிள்ளையிடம் மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும், சிவில் உரிமைகள் தொடர்பாகவும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றார் நம்பிக்கையும் ஆதங்கமும் கலந்த குரலில்.
ஏழு நாள் இலங்கைப் பயணத்தில் எட்டு தரப்பினரைச் சந்தித்த நவிபிள்ளை, இலங்கை மண்ணில் இருந்தபடியே கூறிய கருத்துகள் முக்கியமானவை.
இதற்கு முன்னர் இப்படி ஒரு விசும்பலையும் கண்ணீரையும் நான் காணவில்லை. அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட என்னால் முடியவில்லை. பெரும்பாலான பெண்கள், வீட்டில் கணவரையோ, மகனையோ இழந்திருக்கிறார்கள். என்னுடன் உரையாடிய பொதுமக்களையும் சில மனித உரிமை ஆர்வலர்களையும் அதற்குப் பின் இராணுவம் அச்சுறுத்தி துன்புறுத்தியிருக்கிறது.
இது இலங்கையில் நிலவும் ஏதேச்சதிகாரப் போக்கையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இந்தக் கண்காணிப்பையும் துன்புறுத்தலையும் பார்க்கும்போது இங்கு ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. ஐ.நா. அமைப்புகளும் அமெரிக்காவும் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்டது குறித்து இலங்கை நம்பகமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டிவரும்!” என்று எச்சரித்தார்.
இப்படிப் பல நம்பிக்கைகளை நவிபிள்ளையின் வருகை விதைத்தாலும், அவரது சில வார்த்தைகளே அந்த நம்பிக்கையிலும் நச்சு பாய்ச்சுகிறது!
இனப்படுகொலை என்று தமிழர்கள் சொல்கிறார்கள். நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா?” என்ற கேள்விக்கு, ”இனப்படுகொலை என்ற வார்த்தையை என்னிடம் யாரும் பயன்படுத்தவில்லை. அதிகாரிகளோ, பொதுமக்களோ, ஊடகங்களோ சொல்லவில்லை.
‘இனப்படுகொலை’ என்ற வார்த்தை சட்டப்பூர்வமான வார்த்தை. ஒரு மக்கள் கூட்டத்தை இனரீதியாக ஒதுக்கி கொலை செய்திருந்தால் அதை நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டும்.
ருவாண்டாவில் இனப் படுகொலைக்கான மிகத் தெளிவான ஆதாரங்கள் இருந்தது. இலங்கையில் நிகழ்ந்தவை இனப் படுகொலையா என்பது பற்றி முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்” என்று நழுவினார்.
‘நீங்கள் சென்ற பிறகு மக்களை இராணுவம் அச்சுறுத்தினால் ஐ.நா-வோ நீங்களோ பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பீர்களா?” என்று கேட்டதற்கு, ”நான் எப்படி பாதுகாக்க முடியும். இது சிக்கலான விஷயம். அவர்களைப் பாதுகாப்பது கடினம்தான். என் வேலை இங்குள்ள சூழலைக் கணித்து அறிக்கை தாக்கல் செய்வது மட்டுமே!” என்றார்.
தனது வருகை சம்பிரதாய சடங்காக மாறிவிடக் கூடாது என்ற பொறுப்பு, நவி பிள்ளைக்குத்தான் இருக்கிறது!
இந்த அமைச்சன் இந்த அம்மையாரை கூறியது இந்திய பெண்களை பற்றி அறியாத முட்டாள் .இதில் இருந்து இவன் குடும்பம் எப்படி
இருக்கும் புரிந்து கொள்ளுங்கள் .இதை எல்லாம் நம் இந்தியா
வேடிக்கை பார்கிறது ..