மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாகாண சபையை அமைப்பதன் மூலமே மாகாண ஆளுனரின் தேவையற்ற தலையீடுகளினால் ஏற்படும் பிரச்சனைகளை பெருமளவில் குறைக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் நகர பிதா எஸ்.என்.ஜி. நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இனவாத அரசுகளால் தமிழ்பேசும் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு வகைகளிலும் அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட போது உரிமை வேண்டிய எமது போராட்டம் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் எழுச்சி பெற்றது.
நடைபெற்ற வீரமும் அர்ப்பணிப்புகளும் நிறைந்த ஆயுதம் தாங்கிய உரிமைப் போரும் 2009ல் முள்ளிவாய்க்காலில் உச்சமடைந்த மனிதப் பேரழிவுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது யாவரும் அறிந்ததே.
60 வருட உரிமைப் போராட்டத்தில் நாம் இழந்தவை சொல்லிடங்கா.
எப்போதும் போல தற்போதைய அரசும் இன்றும் இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களின் சுதந்திர இருப்பையும் இன, மத அடையாளத்தையும் இல்லாது ஒழிக்க பல்வேறு வழிகளிலும் மூர்க்கமாக செயற்பட்டு வருகின்றது.
ஏற்கனவே காத்திரமான அதிகாரமேதுமற்றிருந்த மாகாண சபை முறைமையானது இன்று மேலும் நீர்த்துப்போக வைக்கப்பட்ட நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை ஒருபோதும் வழங்கப் போவதில்லை.
அத்துடன் விலைமதிப்பற்ற எம்மவர்களின் தியாகங்களுக்கு ஒருபோதும் ஈடாகப் போவதுமில்லை.
ஆனாலும் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலானது எமது வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
ஏனெனில் அரசாங்கமானது அபிவிருத்தி என்ற மாயைக்குள் எமது மக்களைச் சிக்க வைத்து சர்வதேசத்திற்கு தமிழ் பேசும் மக்கள் அரசுடன் இருப்பதாகவும் நாம் உரிமையை அல்ல அபிவிருத்தியையே கேட்கின்றோம் என்று காட்ட முனைகின்றது.
இதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு இந்நாட்டில் அரசியல் பிரச்சனை ஏதும் இல்லையென்றும் வெறுமனே பயங்கரவாத பிரச்சினையே இருந்ததாகவும் காட்டிக்கொள்ள முனையும் அரசாங்கத்தை தோற்கடிக்கும் சந்தர்ப்பமாகவே இத்தேர்தலை நாம் நோக்க வேண்டும்.
இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிகொள்ள வைப்பதன் மூலம் அமையப் போகும் மாகாண சபையின் நடவடிக்கைகளில் மாகாண ஆளுனரின் தேவையற்ற தலையீடுகளினால் ஏற்படும் பிரச்சினைகளை பெருமளவில் குறைக்க முடியும்.
எனவே இந்த மாகாணசபைத் தேர்தல் மூலம் குறைந்தபட்சமாக
எமது எதிர்கால இருப்பிற்கு உத்தரவாதத்தை வெளிக்கொண்டு வருவதற்காக வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையிலான அரசியல் உரிமைகளையே தமிழ்பேசும் மக்கள் கோரி நிற்கின்றார்கள் என்பதை இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும்; உணர்த்துவது,
இலங்கை அரசிடமிருந்து சட்டரீதியான மேற்படி உரிமைகளை வென்றெடுப்பதற்கான இயங்குதளத்தினை அமைத்துக் கொள்வதற்கு,
அரசின் திட்டமிட்ட இனரீதியான குடியேற்றங்கள் மூலம் எமது தாயகத்திலேயே எமது இன விகிதாசாரத்தை குறைப்பதைத் தடுப்பதற்கு,
அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களிற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு,
அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் தமிழ்பேசும் மக்களை ஒன்றுபடுத்தி எமது தேசிய உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது,
மாகாண அரசின் வரையறைக்குட்பட்ட வகையில் எமது படித்த இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதில் உள்ள பாரபட்சத்தை நீக்குவது.
அடுத்ததாக, என்றோ ஒருநாள் தமிழ் ஈழம் முளைக்கும் என்ற நம்பிக்கைக்கு வித்தாகவும், உரமாகவும் இருந்து செயல்பட.