இலங்கையில் ஈழம் உருவாக வாய்ப்பில்லை: சுப்ரமணியன் சுவாமி

mahinda_swamy_002இலங்கையில் தனி ஈழம் என்ற தனிநாடு உருவாக வாய்ப்பில்லை என இந்திய ஜனதா கட்சியின் தலைவரும் கடும் போக்கு தமிழ்த் தேசிய எதிர்ப்பாளருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெறும் இராணுவ கருத்தரங்கில் உரையாற்றும் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையில் தனிநாடு அமைக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க தமிழ் நாட்டு தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் தங்களின் பாதுகாப்புக்கும், தமது பிள்ளைகள் பாடசாலைக்குள் சென்று பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்புவார்களா என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய தேவை தற்போதில்லை.

விடுதலைப்புலிகள் தமது பிள்ளைகளை படையில் இணைத்து கொள்வார்கள் என்றும் அச்சம் கொள்ள தேவையும் இல்லை. எனினும் இது தமிழர்களுக்கு அதிகார பரவலாக்கம் தேவைப்பாடாது என்று அர்த்தமாகிவிடாது. ஜனநாயக ரீதியான அதிகாரங்கள் தமிழர்களுக்கு பகிரப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தை ஆதரித்த இந்திய அரசியல்வாதிகள் உட்பட இந்தியாவில் உள்ளவர்கள் தற்போது முதலை கண்ணீர் வடித்து வருகின்றனர்.

எந்த போரிலும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அவர்களை கேடயங்களாக பயன்படுத்துவதில்லை ஆனால், விடுதலைப்புலிகள் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தினர்.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக மட்டுமே மனித உரிமை மீறல்கள் குறித்து தனியான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை அபத்தமானது என்பது எனது நிலைப்பாடு. பயங்கரவாதிகளுடன் இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவது ஆபத்தான விடயம் என்றார்.

இரண்டாம் இணைப்பு

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் எதிர் நோக்கும் மீனவர் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

TAGS: