இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையின் கண்காணிப்புக் குழுவொன்றினை நிறுத்துமாறு தாயகத்திலும், புலத்திலும் உள்ள தமிழர் அரசியல் தரப்பினால் ஐ.நா ஆணையாளரிடம் முன்வைத்த கோரிக்கை, அரச தரப்பினை சீற்றங் கொள்ள வைத்துள்ளது.
தமிழர் தாயகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும், புலம்பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும், நவிப்பிள்ளை அம்மையாரிடம் இக்கோரிக்கையினை அவரது இலங்கைக்கான பயணத்தின் போது முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் தமிழர் தரப்பின் இக்கோரிக்கையானது சிறிலங்காவின் இறைமைக்கு சவால் விடுகின்ற விடயம் என சிங்களத்தரப்பு தனது சீற்றத்தினை வெளியிட்டுள்ளது.
நெருக்குதல்கள், அழுத்தங்கள் இருந்தால் மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதனையும் செய்கின்றது. இல்லையேல் புறக்கணித்து விடுகிறது. வடமாகாணத் தேர்தல் இந்தியாவின் நெருக்கடியால் நடைபெறப் போகின்றது.
இந்நிலையில் இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர கண்காணப்புக் குழுவின் பிரசன்னத்திற்கான தேவைபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆட்கடத்தல், காணாமல் போதல், சித்திரவதை, சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், பாலியல் வன்முறைகள் உள்ளடங்கலாக எண்ணிலடங்காத மனித உரிமை மீறல்கள் தீவின் வடக்கு- கிழக்கு பாகங்களிலுள்ள ஈழத்தமிழ் மக்கள்மீது சிறிலங்கா படையினரால் நிறைவேற்றுப்பட்டு வரும் நிலையில், ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையின் ஒர் அங்கமாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பாளர்களை நிலைகொள்ள வைக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியிருந்தார்.
இந்நிலையில் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புக்களின் இக்கோரிக்கை சமபொழுதில் வந்துள்ளமை, தமிழர் அரசியலில் நம்பிக்கைதரும் சமிக்ஞை என தெரிவிக்கப்படுகின்றது.