25 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் நடைபெறப் போகிறது வட மாகாணத் தேர்தல். கொழும்பு வாழ் தமிழரும் இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியிருக்கிறது.
பழுத்த அரசியல் வாதிகள் பலர் கூட்டமைப்பினுள் இருக்க அரசியலுக்கு புதியவரான விக்னேஸ்வரன் பேரினவாத சிங்கள அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்.
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி – ராஜபக்ச குடும்பத்தினரின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தை மீறி வட மாகாண தேர்தலில் உங்களால் வெற்றிபெற முடியுமா?
பதில் – யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் அடங்கியதுதான் வட மாகாணம். இதில் உள்ள 36 ஆசனங்களில் யார் அதிகம் வெல்கிறார்களோ அவர்களுக்கு மேலதிகமாக இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் என்கிற நிலையில் எங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் 51 பேர் போட்டியிடுகிறோம். நான் முதல்வர் வேட்பாளராக நிற்கிறேன்.
அரசோடு சேர்ந்து இயங்கும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும், இராணுவத்தின் கையாட்களும்கூட போட்டியிடுகிறார்கள். நாங்கள் வெற்றி பெறுவோம். இங்கே வெற்றி பெறுவதல்ல பிரச்சினை. மூன்றில் இரு பங்கு இடங்களில் வென்றாக வேண்டும். அப்போதுதான் தமிழர் தரப்பில் நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக நின்று அரசுடன் பேச முடியும்.
ஜெயவர்த்தன கொண்டு வந்த மாகாண சபைச் சட்டங்களில் உள்ள குறைபாடுகள் இப்போது தெரிய வருகின்றன. நாம் அரசியல் ரீதியாக வலுவடைந்தால் மட்டுமே அதில் திருத்தங்கள் கொண்டுவர முடியும்.
கேள்வி – எல்லாவற்றையும் இழந்துவிட்ட வட பகுதி மக்களின் வாழ்வில் இந்த தேர்தல் மாற்றம் கொண்டு வருமா?
பதில் – மக்களின் நிலை மோசமாக உள்ளது. போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் வாழ்வில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகளை இலங்கை அரசு சாலை போடவும், சிங்களவர்களை தமிழ் பகுதிகளில் குடியேற்றவுமே பயன்படுத்துகிறது.
மற்றப்படி நான் இந்த அரசியலுக்கு புதியவன் என்பதால் அரசின் அபிவிருத்திகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நாங்கள் வெற்றி பெற்றால் வடக்கில் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.
கேள்வி – தமிழர்கள் தங்களை சுயமாக ஆள வேண்டும்’ என்று பிரசாரம் செய்கிறீர்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டதே?
பதில் – பிரிந்து போகும் சுயநிர்ணயம் கோருவதையே நாம் கைவிட்டுள்ளோம். அதாவது தனி நாடு கோருவதை. உள்ளார்ந்த சுயநிர்ணயத்தை கோரி நிற்கிறோம். இந்தியாவில் இருப்பதைப் போல ஒரு மாநில அமைப்பையே கோருகிறோம்.
கேள்வி – இந்தியாதான் உங்களை முதல்வர் வேட்பாளராக களமிறக்கியது என்றும் இந்தியாவைச் சார்ந்துதான் உங்களால் அரசியல் செய்ய முடியும் என்றும் சொல்கிறார்களே?
பதில் – இந்தியாதான் என்னை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது என்று யார் சொன்னார்கள்? இதுவரை நான் இந்தியாவுடனோ அல்லது இந்தியாவின் உயர் மட்டத்துடனோ அரசியல் தொடர்பாகப் பேசியதில்லை. இந்தியா எமது நேச நாடு அவ்வளவுதான்! அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை.
கேள்வி – லட்சம் பேர் கொல்லப்பட்டு, பல்லாயிரம் பேர் காணாமல்போய் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் உலகம் இலங்கையிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறதே?
பதில் – அதில் என்ன தவறு இருக்கிறது? கொலை செய்தவர்களை யார் என்று கண்டுபிடித்து தண்டிக்க வேண்டாமா? அமைதியாக சிந்தித்து உறுதியாக நடவடிக்கை எடுக்க மென்மையான போக்கைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
நவநீதம்பிள்ளை, போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுள்ளார். இராணுவத்தை அகற்றுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, மக்களின் சிவில் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை நாங்கள் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவரும் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.
நிச்சயம் நல்லது நடக்கும். நம்பிக்கையோடு இருப்போம்!
கேள்வி – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீங்கள், இலங்கையில் நீதித்துறையின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
பதில் – 18-வது அரசியல் யாப்புத் திருத்தத்தின் கீழான அரசியல் சட்டம் அரசியல் சார்பு என்னும் கொடிய நோய்க்கு ஆளாகி இருக்கிறது. நோயுள்ள ஒரு அரசியல் யாப்பை வைத்துக்கொண்டு ஆரோக்கியமான நீதியை நீதித் துறையால் வழங்க இயலுமா என்றால் அது சந்தேகம்தான்!
நல்லது நடக்கும் என நம்பிக்கையோடு இருப்போம். நல்லதோ கெட்டதோ அனுபவிப்பது நீங்கள் தானே.