நவி.பிள்ளையின் இலங்கைப் பயணம் அனைத்துலக விசாரணைக்கான அவசியத்தினை மீளவும் வலுவூட்டுகின்றது: வி.உருத்திரகுமாரன்

pm_rutthiraஐ.நா உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது இலங்கைக்கான பயணம், அனைத்துலக விசாரணைக்கான அவசியத்தினை மீளவும் வவூட்டியுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அவசியத்தினை சுட்டிக்காட்டியிருப்பதோடு, இலங்கைத் தீவில் சிங்கள அரச கட்டமைப்பினாலும் அதன் ஆயுதப் படையினாலும், தமிழ் மக்கள் தொடர்சியாக சந்தித்து வருகின்ற எண்ணிலடங்கா மனிதஉரிமை மீறல்களில் இருந்து அவர்களை காக்க, ஒர் அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்றின் அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஐ.நா ஆணையாளரை சந்தித்திருந்த அப்பாவித்தமிழ் மக்களை அச்சுறுத்தியிருந்த சிறிலங்கா படையினரது நடவடிக்கை குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உடனடியாக வெளிக்கொண்டு வரப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் நவநீதம்பிள்ளை அவர்கள் காத்திரமான தனது நிலைப்பாட்டினை எடுத்தமைக்காக நாம் அவரைப் பாராட்டுகின்றோம் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையின் முழுமையான வடிவம்:

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளர் மதிப்புக்குரிய நவநீதம் பிள்ளை அவர்கள் கடந்தவாரம் இலங்கைத் தீவுக்கு சென்றதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் வரவேற்கின்றது.

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியில் இடம் பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், பெருந்தொகையான தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணை தேவை என மனித உரிமைகளிலும், உலகசட்டங்களிலும் ஆர்வம் கொண்டுள்ளவர்களினால் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பிள்ளை அவர்களின் இலங்கைக்கான பயணம் வலுவூட்டிநிற்கின்றது.

இலங்கைத்தீவில் சிங்கள அரச கட்டமைப்பினாலும் அதன் ஆயுதப் படையினாலும், தமிழ் மக்கள் தொடர்சியாக சந்தித்து வருகின்ற எண்ணிலடங்கா மனிதஉரிமை மீறல்களில் இருந்து அம்மக்களை காக்க, ஒரு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை அவசியமாகும். அதன் மூலமே சிங்கள இனவாக அரசு தமிழ் மக்களைப் பாகுபாடானமுறையில் ஒதுக்கி வைத்து, அவர்களை வறுமைக்குள்ளாக்கி அத்தீவிலிருந்து அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி சிறிலங்காவில் செயற்படவில்லை எனவும் நீதித்துறையின் சுதந்திரத்தில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது எனவும் நவிப்பிள்ளை அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.

navaneethmpilaiஅத்துடன், சிறிலங்கா அரசுத் தலைவர் நியமித்துக் கொண்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளில் இபோரின் இறுதிக் காலத்தில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள், மற்றைய குற்றங்கள் பற்றிய முழுமையான, வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணை இடம்பெறல் வேண்டும் எனும் விடயமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற அவரின் நோக்கும் அனைத்துலக விசாரணையின் அத்தியாவசியத்தை மேலும் வலியுறுத்தி நிற்கின்றன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பின்னர், ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை, ஐ.நா இடைக்கால மீளாய்வு அறிக்கை மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபையினதும், மனிதஉரிமைக் காப்பகத்தினதும் நிறுவனங்களினதும் அறிக்கைகள் யாவும் இலங்கைத் தீவில் அரசியல் சூழலோ நீதிபரிபாலன சூழலோ, நீதியை உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமாகவும் நிலைநாட்டுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அனைத்துலக விசாரணையால் மட்டுமே அதுமுடியும் என்ற கூற்று நவிப்பிள்ளை அவர்களின் அனைத்துலக விசாரணை மூலமே நீதியை நிலைநாட்டமுடியும் என்ற நிலைப்பாட்டுக்கு இன்னும் வலுவூட்டுகின்றன.

நவநீதம் பிள்ளை அவர்களைச் சந்தித்தவர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினர் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்கள் என நா.க.த.அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இவ்விடயம் தொடர்பாக நவநீதம் பிள்ளை அவர்கள் காத்திரமான தனது நிலைப்பாட்டினை எடுத்தமைக்காக நாம் அவரைப் பாராட்டுகின்றோம்.

அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் சிங்கள இராணுவத்தின் ஆதிக்கத்தின் தாக்கத்தையும், ஆட்கள் தொடர்ந்து காணாமல் போகும் நிலைமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குறிப்பாகக் குடும்பப் பொறுப்பை ஏற்றுத் தனியாக வாழும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் என்பவற்றை பிள்ளை அவர்கள் நேரடியாகக் கண்டறிவதற்கு இப்பயணம் வழிவகுத்துள்ளது.

காணாமல் போயுள்ள ஒரு குடும்பத் தலைவனைப் பற்றி அவரது மனைவி குறிப்பிட்ட “நாங்கள் சாப்பிடும் போதும் ஒவ்வொரு தடவையும் அவருக்காக கொஞ்சம் சாப்பாட்டை ஒதுக்கிவைப்போம்” என்ற கூற்று ஒவ்வொருவரதும் இதயத்தைத் தொடும் வார்த்தைகளாகும். இன்றைய தேவைகளில் அவசியமானது அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையேயாகும்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென நவிப்பிள்ளை அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை நாங்களும் வரவேற்கின்றோம். மேலெழுந்த பார்வையில் இச்சட்டம் யாவர்க்கும் பொதுவானதாகத் தெரிகின்ற போதிலும், இது உண்மையில் தமிழ் மக்களைக் குறி வைத்தியங்கும் ஒருசட்டம் என்பதுதான் யதார்த்தம்.

மற்றும் அரசியல் கைதிகள் பற்றிய விசாரணைகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் நடாத்தவேண்டுமெனவும் அவர் விடுத்துள்ள கோரிக்கையையும் நாம் வரவேற்கின்றோம்.

இலங்கையின் வடபுலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலானது அதிகாரப் பகிர்வுக்கான பாதையில் ஒருமுக்கிய கட்டமாகும் என மனிதஉரிமை ஆணையாளர் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தினைத் தாயகத் தமிழ் அரசியல் தலைமைகள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பன்னாட்டு அமைப்பொன்றில் பணியாற்றும் நவிப்பிள்ளை அவர்களது தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான கூற்று அவர் தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக் கொள்வதற்காகக் கூறியதாகவும் கொள்ளலாம்.

எனினும், ஒரு அடக்குமுறையாளனையும் அடக்கப்படுபவனையும் ஒரே தராசில் வைத்து அளவிடுதல் முறையல்ல என்பதே எமது நிலைப்பாடாகும்.

கொடுமைகளைப் புரிபவனையும் அதனால் பாதிக்கப்படுபவனையும் ஒன்றாக நோக்குதல் எந்தத் தார்மீக அடிப்படையிலும் பொருந்தாது.

தென் ஆபிரிக்காவில் அதிபர் வேட்பாளராக விளங்கிய போது திரு சூமா அவர்களும், பின்னர் ஆபிரிக்க தேசிய கொங்கிரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒரு தேசிய விடுதலை இயக்கம் என கருத்து வெளியிட்டுத் தோழமை பாராட்டியதை நாம் இங்கு சுட்டிக் காட்டவிரும்புகின்றோம்.

இக்கருத்தினை திரு. சூமா அவர்களும் ஆபிரிக்க தேசிய கொங்கிரசும் கூறியது 1999ஆம் ஆண்டு யூன் மாதத்தில் அல்ல. இந்தக் கருத்தை அவர்கள் வெளியிட்டது முறையே 2008ஆம் ஆண்டு டிசம்பர்இ 2009ஆம் ஆண்டு மார்ச் ஆகிய காலங்களில் தான் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்கள் எமது சுதந்திரதிற்காகச் செய்த அளப்பரிய தியாகங்களையும், அத்தியாகிகளையும் மனித சமுதாயத்தின் உன்னத இலட்சியங்களில் ஒன்றாகச் சுதந்திரத்தைப் பேணும் ஒவ்வொரு மனிதனும் நெஞ்சிலிருத்திப் போற்றுதல் வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துகின்றோம்.

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்த உண்மைகளை கண்டறியவும், நீதியை நிலைநாட்டவும், இழப்புகளுக்கான பரிகாரம் வழங்கப்படவும் ஒரு முழுமையான அணுகுமுறை தேவையென மனிதஉரிமை உயர் ஆணையாளர் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ள கருத்துடன் நாங்களும் இணக்கப்பாடு கொண்டுள்ளோம்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தமக்குரிய அடிப்படை உரிமையாகிய சுய நிர்ணய உரிமையினை தமது நிலைமைக்குப் பரிகாரம் பெறும் வடிவில் (remedial fashion) பயன்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்படல் வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.

இலங்கைத்  தீவில் மனிதஉரிமைகள் தொடர்பாக நவநீதம் பிள்ளை அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் ஈடுபாடுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுவதோடு, தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது. ஐநா மனிதஉரிமைப் பேரவைக்கு அவர் கொடுக்கவுள்ள விரிவான அறிக்கையினை நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

உலகளாவிய வகையில் மனிதஉரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் முன்னகர்த்தும் சீரிய பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுவதோடு, புலம்பெயர் தமிழர்களாகிய நாமும் அவர்களுடன் எங்கள் கரங்களை இணைத்து கொள்வதில் பெருமையடைகின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: