ஜனாதிபதி வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும்!- யாழில் பசில் மக்களுக்கு எச்சரிக்கை!

basilதுவக்கில்லாத சூழல், குண்டுச் சத்தம் இல்லாத சமாதானம், கல்வி. சுகாதாரம் போக்குவரத்து என்பன தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமானால் ஜனாதிபதி வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும் என பொருளாதார அமைச்சர் வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று சென்றிருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். மாவட்ட ஒருங்கிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பணியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் ஜனாதிபதியாக இருந்தவர்களால் செய்ய முடியாது போன சமாதானம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை மகிந்த ராஜபக்ச செய்து முடித்துள்ளார்.

அதுபோலவே இந்த மாகாண சபைத் தேர்தலையும் நாடாத்த ஏற்பாடு செய்துள்ளதுடன், வடக்கு. மக்கள் முதன்முறையாக வடமாகாண சபையில் தமக்கு வேண்டியவர்களை சுதந்திரமாக தெரிவுசெய்யும் சந்தரப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இருப்பினும் கொழும்பில் இருக்கின்றவர்கள் இங்கு வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அப்படியாயின் கடந்த 5 வருடங்களாக நாமும் வடக்கிற்கு வந்து போகின்றோம். அவ்வாறான நிலையில் நாமும் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட முடியும்.

எனினும் அரசினால் வழங்கப்படும் உதவிகளுக்கு மக்கள் எங்களுக்கு நம்பிக்கையாக இருப்பார்கள். வடக்கு மக்கள் சமாதானத்தை விரும்புபவர்கள், குழந்தைகளது கல்வி அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க விரும்புவர்கள். அதனை மக்கள் நிரூபிப்பதற்கு எதிர்வரும் 21ம் திகதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே வடக்கு மக்கள் துவக்கில்லாத சூழல், குண்டுச் சத்தம் இல்லாத சமாதானம், கல்வி. சுகாதாரம் போக்குவரத்து என அனைத்து அபிவிருத்தியையும் தொடர்ந்தும் பெற வேண்டுமானால் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள இறுதிச் சந்தர்ப்பமான மாகாண சபைத் தேர்லில் யோசித்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: