வடக்கு மாகாணத்தில் மக்களை இராணுவ அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் அரசாங்கம்!- ஜேவிபி குற்றச்சாட்டு

santhirasekaran_iவடக்கு மாகாணத்தில் போர் நிவைடைந்து 4வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், போரி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் இராணுவ அராஜகத்தை வளர்த்து மக்களை அடக்கு முறைக்குள் வைத்திருக்கின்றது என ஜேவிபி குற்றஞ்சாட்டியுள்ளது,

100ற்கு 50வீதமான மக்கள் இப்போதும் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 100ற்கு 80வீதமான மக்கள் கடனாளிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். இதுவே 4வருடஙகளில் மஹிந்த அரசாங்கம் செய்த சாதனை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும், சமகால அரசியல் நலைமைகள் குறித்தும் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

30வருடங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வாதார ரீதியாகவும், அடிப்படை வசதிகளிலும் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என நாம் கேட்டிருந்தோம். அதற்கு வடக்கின் வசந்தம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் கூறியது.

ஆனால் வடக்கின் வசந்தம் மக்களுடைய வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக அதனை நடைமுறைப்படுத்திய அமைச்சர்களுடைய வாழ்விலேயே வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

எனவே வடக்கு மக்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் திட்டம் இல்லை. அந்த விடயத்தில் அரசு தோற்றுப் போயிருக்கின்றது.

2009ம் ஆண்டிற்கு முன்னர் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான பிரச்சினைகள் க்கிரமடைந்த நிலையில் மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ தயாரான போது இந்த அரசாங்கம் அதோ புலிகள் இருக்கிறார்கள், பிரபாகரன் இருக்கிறார் என பூச்சாண்டி காட்டியது.

இப்போது அவ்வாறான அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் மேலும் வலுப்பற்றிருக்கும் நிலையில் மக்கள் கிளர்ந்தெழுவதை தடுப்பதற்காக இப்போது சிங்கள இனவாதத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது.

தென்னிலங்கையில் நடக்கும் இனவாத அராஜகங்களுக்குப் பின்னால் அரசாங்கமே இருக்கின்றது.  அதன் மூலம் அரசாங்கம் தனது எதேச்சாதிகார இருப்பை மீளவும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்காக இன அடிப்படையில் மக்களை பிரிப்பதற்கும் அது தவறவில்லை.

எனவே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய அடிப்படை, வாழ்வாதார வளத்தை மேம்படுத்தவும், மஹிந்த அரசிடம் எந்த தீர்வும் கிடையாது.

இதனாலேயே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பிற்போக்கு சக்திகள் இலங்கையின் தேசியப் பிரச்சினையை களமாக எடுத்துக் கொண்டு செயற்படுகின்றன.

இதேபோன்று வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாக நடைபெறுமா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நாம் கூறுகின்றோம் மஹிந்த அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியதன் பின்னர் நடைபெற்ற எந்த தேர்தலும் நீதியாக நடைபெறவில்லை. எனவே வடக்கு தேர்தல் மட்டும் நீதியாக நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.

நீதியாக நடைபெற்றும் அல்லது நடைபெற்றது என்ற தோற்றம் வெளிப்பட்டாலும். மறைமுகமாக பல நீதியற்ற, ஜனநாயகமற்ற விடயங்கள் நடந்திருக்கும்.

ஜனாதிபதியாக இருந்துகொண்டே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது,  எனவே முதலில் நீதியான தேர்தலுக்கு வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

திருமண வீடு, பாடசாலை நாடகப் போட்டி என சகல விடயங்களிலும் இராணுவம் தலையிட்டு அடக்கு முறைக்குள், மக்களை வைத்திருக்கப் பார்க்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்னி மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் நாடகப் போட்டிக்கு மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது அந்த நாடகத்தின் கதையை தமக்கு தரவேண்டும். அதன் பின்னரே நாடகம் நடத்த வேண்டும் என படையினர் கேட்டுள்ளனர்.

இதேபோன்று புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், அல்லது கிராமங்களுக்குச் செல்லும் வெளியார் படையினரால் கண்காணிக்கப்படுகின்றார்கள்.

இவை தேவையற்றவை, வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னரே இங்கு ஜனநாயகம் என்பதும், நீதி என்பதும் இருக்கும் என்றார்.

TAGS: