இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதாரசூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார்.
சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என இலங்கைக்கான யுனிசெப் வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலக நிர்வாக பிரிவுகளிலும் யுனிசெப்பின் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்படும் பிரதேசங்களிலே சிறுவயது திருமணங்களும் அதிகம் காணப்படுவதாக யுனிசெப் தெரிவிக்கின்றது.
தமது பிரதேசத்தில் பாடசாலை இடைவிலகலுக்கும் சிறுவயது திருமணங்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறித்த பிரதேச செயலக அதிகாரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
குடும்பத்தின் ஏழ்மையான சூழல், தந்தையின் மதுப்பாவனை மற்றும் தாயானவர் மத்திய கிழக்குக்கு வேலைக்குப் போவது போன்ற காரணிகள் இப்படியான சிறுவயது திருமணங்களை அதிகப்படுத்துவதாக கூறுகிறார் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரான துரைசிங்கம் ஜெயசாந்தினி.
சிறுவயது திருமணத்திற்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது குறித்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆனால் நடைமுறைச்சிக்கல்களும் சமூக சூழ்நிலையும் அந்த கணவனை தண்டிப்பதற்கு இடமளிப்பதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகரான அருள்வாணி சுதர்சன் இலங்கையில் திருமண சட்டம் 18 வயதுக்கு கீழ் திருமணப்பதிவு செய்வது சட்ட விரோதம் என்கிறது. ஆனால் அதேசமயம், 16 வயதுக்கு மேற்பட்ட பெண் விரும்பும் ஆணுடன் உறவு வைப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என்றும் சட்டம் சொல்கிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு குறைந்த பெண் திருமணம் செய்யத்தான் தடை இருக்கின்றதே தவிர விரும்பும் ஆணுடன் இணைந்து வாழ தடை இல்லை என்றாகிறது. இதுவும் அந்த நடைமுறைச்சிக்கல்களில் குறிப்பிடத்தக்கது என்று இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் அருள்வாணி சுதர்சன்.
சிறுவயது திருமணத்தை பொறுத்தவரை சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விழிப்புணர்வு செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தாலும் அது எதிர்பார்த்த பலனளிப்பதாக இல்லை என்பது தான் பலரது கருத்தாகவும் இருக்கிறது. -BBC