இலங்கை நிலவரம் குறித்து நவி பிள்ளை மீண்டும் கவலை

navaneetham-pillai1இலங்கைக்கான தனது விஜயத்தின் போது தன்னை சந்தித்தவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறைகள், மற்றும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24வது மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இலங்கையில் புனர்நிர்மாணம், நல்லிணக்கம், போரின் பின்னரான பொறுப்புக் கூறல் ஆகியவற்றுடன், மத சகிப்பின்மை, ஆளுகையும் சட்டத்தின் ஆட்சியும் போன்ற பரந்துபட்ட மனித உரிமைகள் நிலவரம் ஆகியவற்றிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து நானறிவதற்கு ஏதுவாக எனது அண்மைய விஜயத்துக்கு ஏற்பாடு செய்து உதவியமைக்காக நான் இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த மாநாட்டில், பின்னர் நடக்கவிருக்கும் மற்றுமொரு நிகழ்வில் இலங்கை குறித்த எனது அவதானங்களை நான் அறிக்கையிடுவேன்.

ஆனால், எனது விஜயத்தின் போது என்னைச் சந்தித்த மனித உரிமைக் காவலர்கள், செய்தியாளர்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குறித்து நான் எனது உடனடிக் கவலையையும் இங்கு வலியுறுத்த விழைகிறேன்.” என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கைக்கான அவரது விஜயத்தின் போது அவர் பலவிதமான விமர்சனங்களை இலங்கையின் கடும்போக்கு தேசியவாதிகளிடம் இருந்து எதிர்கொண்டார். சில அமைச்சரவை உறுப்பினர்கள் கூட அவருக்கு எதிராக அவதூறாக கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவரைச் சந்தித்த சில மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனையோர் மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

இவை குறித்து தனது இலங்கை விஜயத்தின் முடிவில் கூட நவிபிள்ளை அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தற்போது அது குறித்து அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

”ஐநாவுடனான ஒத்துழைப்பு, அதன் பிரதிநிதிகள், மற்றும் மனித உரிமைகளுக்கான பொறிமுறைகள்” குறித்த ஐநா தலைமைச் செயலரின் அறிக்கை இந்த மாநாட்டின் போது சமர்ப்பிக்கப்படும் என்றும், 2012 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி முதல் 2013 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஐநாவுடன் ஒத்துழைத்ததற்காக அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள், மிரட்டலுக்கு உள்ளானவர்கள் குறித்த விடயங்களும் அதில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே இலங்கையில் ஐநா மனித உரிமைகள் ஆணையரைச் சந்தித்ததற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள், மற்றும் சமூகத்தினர் மிரட்டப்பட்டதாகக் கூறி அவர்களது பாதுகாப்பு குறித்து நவி பிள்ளை அவர்கள் தனது உடனடிக் கவலையை வெளியிட்டமை குறித்து ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் தூதுவர் ஆரியசிங்க அவர்கள் பதிலளித்துள்ளார்.

ஆணையரின் விஜயத்தின் போதான சந்திப்புகள் ஐநாவின் கொழும்பு அலுவலகத்தால் சுயாதீனமாக ஏற்பாடு செய்யப்பட்டன என்று கூறியுள்ள அவர், இலங்கை அரசாங்கம், மனித உரிமை பாதுகாவலர்களுக்கான பாதுகாப்பை வழங்க அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், ஆகவே அப்படியான மிரட்டல், அல்லது தாக்குதல் சம்பவங்கள் ஏதாவது நடந்திருந்தால் அவை குறித்து குறிப்பான தகவல்களை ஐநா மனித உரிமைகள் ஆணையம் தந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளார். -BBC

TAGS: