இலங்கையில் நடக்கும் இந்திய உதவி வீடமைப்புத் திட்டத்தில் காணப்படும் முன்னேற்றம் குறித்து நேரில் ஆராய்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சென்றுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் அபிவிருத்தி மற்றும் பங்களிப்பு நிர்வாகத்திற்கான சிறப்பு செயலாளர் பி.எஸ். ராகவன் தலைமையிலான இக்குழுவில் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளுடன் கட்டிட கலை நிபுணர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
போருக்கு பின்னர் இந்தியா இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ள 49 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரம் வீடுகள் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஏனைய வீடுகள் வடமாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்திலுள்ள உறுகாமம், புல்லுமலை மற்றும் மங்களகம ஆகிய கிராமங்களில் இந்த வீடமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மேற்படி வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட இன்று மட்டக்களப்புக்கு ஹெலிக்கொப்டர் மூலம் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை கொண்ட குழுவினரை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம். எஸ். சார்ள்ஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்.
தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் றூகம் கிராமத்திற்கு சென்று வீடமைப்பு பணிகளை பார்வையிட்டதோடு அவர்கள் பயனாளிகளை சந்தித்து உரையாடினர்.
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய உதவி வீடுகள் வரப்பிரசாதமாக அமைதிருந்தாலும் போதுமானதாக இல்லை என உள்ளுர் மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
குறித்த குழுவிற்கு தலைமை வகித்த இந்திய வெளியுறவு அமைச்சை சேர்ந்த சிறப்பு செயலாளர்களில் ஒருவரான பி.எஸ்.ராகவன் வீடமைப்பு பணிகளில் பயனாளிகள் திருப்தியுடன் காணப்படுகின்றார்கள் எனக் கூறினார். கிழக்கு மாகாணத்தில் இந்திய வீடமைப்பு பணிகள் திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களில் இதுவரை ஆரம்பிக்கப்பபடவில்லை.
குறித்த விடயம் தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ”ஒரு நிகழ்ச்சி திட்டம் மற்றும் கால அட்டவனையின் கீழ் தான் வீடமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படும்” என அவர் பதிலளித்தார். ஆனால் அது எப்போது என கூற முடியாது? என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று வடமாகாணத்திற்கு சென்றிருந்த இக் குழுவினர் மத்திய மாகாணத்திற்கும் செல்லவிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. -BBC
இவரு போய் பார்த்து அவர் குடும்பதுக்கு ஒரு வீடு வாங்க போறாரு .