சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது!-தமிழ் கூட்டமைப்பு

mahinda_fonsekaபொறுப்புக் கூறல்,சர்வதேச விசாரணையில் இருந்து  இலங்கை அரசு தப்பமுடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது..

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையைக் கண்டறியலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கொழும்பில் கடந்த மாதம் சந்தித்தபோது நாம் வலியுறுத்தியிருந்தோம்.

இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு நவநீதம்பிள்ளை கொழும்பிலிருந்து வெளியேறும் போது, உள்நாட்டு விசாரணை நம்பத்தகுந்ததாக இருக்கவேண்டும் என்றும் இல்லையேல், சர்வதேச விசாரணை தவிர்க்க முடியாத ஒன்று என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இருதரப்புகள் (அரச படைகள், விடுதலைப் புலிகள்)  மீதும் குற்றச்சாட்டுகள் இருப்பதால் உள்நாட்டு விசாரணைகள் நீதி, நியாயமற்று நடத்தப்படும். இந்த விசாரணைகளை உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ள மாட்டா. சர்வதேச சுயாதீன விசாரணையையே உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும்.

அதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமெனில், இலங்கை அரசு பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். இதனைத் தட்டிக்கழிக்க முடியாது.

ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலும் பொறுப்புக்கூறல் வலியுறுத்தப்பட்டுள்ளது. பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை இறுதியில் சர்வதேச விசாரணையாகவே அமையும். இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை ஜெனிவாவில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அடுத்தகட்ட அறிவிப்பாக, “இலங்கை அரசு சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பமுடியாது” என்றே கூறுவார்.

இதனைத்தான் நாமும் எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை, நவநீதம்பிள்ளை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை வலுவானதாக இருக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்.

எனவே, சர்வதேசத்தின் பிடியிலிருந்து இலங்கை அரசு தப்பமுடியாது.

TAGS: