மத்திய கிழக்கு மோதல்: அரசு புதிய தகவல் தொடர்பு மையத்தை அமைத்துள்ளது

மத்திய கிழக்கு மோதல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வழங்க, ‘தகவல் தொடர்பு கட்டளை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார். இந்த மையம் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசோப் தலைமையிலான தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் கீழ் இயங்கும்.

இதன் தொடக்கமாக, நாளை முதல் தினமும் மாலை 4 மணிக்கு படில்லா யூசோப் தலைமையில் செய்தியாளர் சந்திப்புகள் நடைபெறும்.

“அரசாங்கம் மற்றும் முகமைகளின் நடவடிக்கைகள், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு மோதல் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்,” என்று அங்காசாபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஃபஹ்மி தெரிவித்தார்.

பொதுமக்களுக்குச் சென்றடையும் தகவல்கள் துல்லியமாகவும், தெளிவாகவும், முறையான வரிசையிலும் இருப்பதை உறுதி செய்ய புத்ராஜெயா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியே இது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“நிதியமைச்சர் (II) அமீர் ஹம்ஸா அஸிஸான் மற்றும் பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லாஹ் நசீர் ஆகியோர் நிதி மற்றும் பொருளாதாரத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுக்களை விரைவில் சந்திப்பார்கள் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கு மோதலால் எழுந்துள்ள பொருளாதார மற்றும் நிதிச் சிக்கல்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், இதுவரை எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும் அவர்களுக்குத் தெரிவிப்பதே இந்தச் சந்திப்பின் நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்.

வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை மேம்படுத்தப்படுகிறது:

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தைப் போலவே, நெகிழ்வான வேலை ஏற்பாடுகளை முறைப்படுத்துவதற்கான ஒரு பகுதியாக, வீட்டிலிருந்தே பணிபுரியும் கொள்கையை அரசாங்கம் இறுதி செய்து வருவதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

அரசாங்க தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும், இந்த நடைமுறை கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

“உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான வணிக உரிம விண்ணப்ப செயல்முறைகளை மறுஆய்வு செய்யும் பணி ஷம்சுல் அஸ்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாமி தெரிவித்தார்.

இதில் உள்ள சிவப்பு நாடா முறையைக் குறைப்பதற்கான முயற்சிகளை அவர் அமைச்சரவையில் முன்மொழிவார். ‘இந்த செயல்முறைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டு, எளிமையாக்கப்பட வேண்டும்,’ என்று அவர் கூறினார்.”

 

 

 

-fmt