மலேசியாவுடன் தொடர்புடைய முதல் கப்பல், பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்து சென்றுள்ளதாக மலேசியாவிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் தூதரகத்தின் எக்ஸ் (X) தளப் பதிவில், அந்தக் கப்பலின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது நண்பர்களை மறக்காது என்று நாங்கள் கூறியிருந்தோம். முதல் மலேசியக் கப்பல் ஹார்முஸ் நீரிணையைக் கடந்தது,” என்று பதிவிடப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலின் பெயர் குறிப்பிடப்படாத நிலையில், பெட்ரோனாஸ் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட, ஈராக் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த எண்ணெய் கப்பல் ஒன்று, ஜோகூர், பெங்கெராங் நோக்கிச் செல்லும் வழியில் ஈரான் கடற்கரைக்கு அருகிலுள்ள நீரிணையைக் கடந்ததாக ராய்ட்டர்ஸ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
‘ஓஷன் தண்டர்’ (Ocean Thunder) என்ற அந்த எண்ணெய் கப்பல் மார்ச் 2-ஆம் தேதி சுமார் ஒரு மில்லியன் பேரல் ‘பஸ்ரா ஹெவி’ கச்சா எண்ணெயை ஏற்றியுள்ளது. இது ஏப்ரல் நடுப்பகுதியில் தனது சரக்குகளை இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இந்த கடல்வழிப் பாதை மூடப்பட்டிருந்தது. அந்த பதற்றங்களுக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதி அளித்த மலேசியாவுடன் தொடர்புடைய பல கப்பல்களில் இதுவும் ஒன்று என நம்பப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை சுமந்து செல்லும் இந்த முக்கிய கடல்வழிப் பாதையில், ஈராக் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று ஈரான் அறிவித்த ஒரு நாளைக்குப்பிறகு இந்த கப்பல் பயணம் மேற்கொண்டுள்ளது.
ஈரான் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மலேசியக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதிக்கும் என்று கடந்த மாதம் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பெட்ரோனாஸ், வான்ட்ரிஸ் எனர்ஜி பெர்ஹாட் மற்றும் எம்.ஐ.எஸ்.சி பெர்ஹாட் (MISC Bhd) உள்ளிட்ட மலேசிய நிறுவனங்களுடன் தொடர்புடைய ஏழு கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்கக் காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் பின்னர் தெரிவித்திருந்தார்.
-fmt
























