இராகவன் கருப்பையா – இவ்வாரம் தமிழ்நாட்டில் நடைபெறும் அதன் மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மலேசிய இந்தியர்களுக்கு எவ்விதமானத் தாக்கத்தையோ பயனையோ கொண்டுவரப் போவதில்லை.
இருந்த போதிலும் என்றும் இல்லாத அளவுக்கு அத்தேர்தல் இங்குள்ள நம் சமூகத்தின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.
தமிழ் நாட்டு அரசியல் இயல்பாகவே பரபரப்பான, கொண்டாட்டமான சூழலைக் கொண்டிருக்கும். தினந்தோறும் வாதங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமே இருக்காது. அரசியல் என்பது அங்கு ஒரு ‘தொழில்துறை’ போன்றது என்று கூட சொல்லலாம்.
தேர்தல் காலங்களில் அந்த மாநிலம் முழுவதும் உற்சாகமாக, பிரமாண்டமான விழாக் கோலம் பூண்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
இம்முறை சினிமா நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் பெயரில் புதிய கட்சியொன்றைத் தொடக்கி அம்மாநிலத்தின் பாரம்பரியக் கட்சிகளுக்குக் கடுமையான போட்டியைக் கொடுப்பதாகத் தெரிகிறது.
தமிழ் நாட்டில் அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாத அளவுக்கு அவை இரண்டும் ஒன்றித்துள்ளது எல்லாருக்கும் தெரியும்.
ஏற்கெனவே கமலஹாசன் மற்றும் விஜய்காந்த் போன்ற முன்னணி நடிகர்கள் பெரிய அளவில் கட்சிகளைத் தொடக்கி தங்களுடைய செல்வாக்கைக் கொண்டு அரசியலில் ஊடுருவ முனைந்ததும் நாம் அறிந்ததே. அதே போல்தான் நடிகரும் இயக்குனருமான சீமானின் நிலைப்பாடும்.
ஆனால் இம்முறை விஜய்யின் அரசியல் பிரவேசம் அம்மாநிலத்தில் மிகப் பெரிய அளவிலான அலைகளை – குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே – ஏற்படுத்தியுள்ளதைப் போலானத் தோற்றம் நிலவுகிறது.
இதனால்தான் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் என்றும் இல்லாத அளவுக்கு சூடேறியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஆனால், ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை,’ என்பதற்கு ஏற்ப அந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு எவ்விதமானத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
அதனால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
நமக்கு இந்நாட்டில் எண்ணற்ற பிரச்சனைகள் காலங்காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்பது ‘வெள்ளிடை மலை’.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் பல்லின அரசியல் தலைவர்களும் இனிக்க இனிக்கப் பேசி வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றனர்.
ஆனால் தேர்தல் முடிந்த பிறகு நடப்பது என்ன? அவர்களுக்குத் தேவையான வெற்றிகள் கிடைத்த பிறகு நம் சமூகம் அவர்களுடைய கண்களில் படுவதில்லை. ‘ஏமாந்த சோணகிரி’களாகத்தான் கண்கலங்கி நிற்கிறோம்.
நமது இன்னல்கள், பிரச்சனைகள், தேவைகள், உரிமைகள், எல்லாமே உதாசினப்படுத்தப்படுகின்றன. கடைசியில் ‘பழைய குருடி கதவைத் திறடி’ எனும் நிலைப்பாட்டிற்குதான் தள்ளப்டுகிறோம்.
இத்தகைய சூழலில் அவதியுறும் நாம், இதிலிருந்து எப்படி மீள்வது? எப்படிப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கல்வியில், தொழில்துறையில், பொருளாதாரத்தில் நாம் ஒவ்வொருவரும் முன்னேற முடியும் என்பதைப் பற்றி சிந்திப்பதில், கலந்தாலோசிப்பதில் நேரத்தை செலவிடலாமே!
தமிழ்நாட்டு அரசியலா நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்போகிறது?























