பினாங்கில் உள்ள ஐந்து தமிழ்ப் பள்ளிகள் நில உரிமையைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து 28 தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிலப் பட்டாக்களை வழங்குவதை மாநில அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சுந்தராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்புக் குழு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் புத்துயிர் பெற்ற பிறகு, ஐந்து பள்ளிகள் நிலப் பட்டாக்களைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் ஐந்து பள்ளிகள் இன்னும் நில உரிமைக்காகக் காத்திருக்கின்றன; அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில அரசு நம்புகிறது.
ராஜாஜி தமிழ்ப்பள்ளி இடமாற்றம் செய்யப்படுவதற்காக, ஃபார்லிம் பகுதியில் 0.93 ஹெக்டேர் நிலத்தை மாநில அரசு வழங்கியுள்ளதாக சுந்தராஜூ தெரிவித்தார்.
76 ஆண்டுகள் பழமையான இப்பள்ளி, தனது புதிய இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகத் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறினார்.
8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டத்திற்கான முழுச் செலவையும் ‘ஐடியல் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற வீட்டுவசதி மேம்பாட்டு நிறுவனம் ஏற்கும் என்றும், இது 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் திட்டமிட்டபடி நடந்தால், 2029 ஆம் கல்வி ஆண்டிற்குள் இப்பள்ளி தனது புதிய வளாகத்தில் செயல்படத் தொடங்கலாம்.
நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளைப் பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு 30 மில்லியனி ரிங்கிட்டிலிருந்து 50 மில்லிய ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 527 தமிழ்ப் பள்ளிகள் பயனடையும் என்றும் அவர் கூறினார்.
தனியாகப் பார்க்கையில், மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவின் நிதி உதவியின் கீழ் பினாங்கில் உள்ள 22 அரசு உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு 1.156 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் வோங் தெரிவித்தார்.
-fmt
























