ஜொகூர் பாரு, ஸ்கூடாயில் உள்ள தாமான் உங்க்கு துன் அமீனா அடுக்குமாடி குடியிருப்பின் (Flat Taman Ungku Tun Aminah) 10 பழைய கட்டடத் தொகுதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் இன்று தொடங்கும் என்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இங்கா கோர் மிங் (Nga Kor Ming) தெரிவித்துள்ளார்.
இன்று ஜொகூர், ஸ்குடாயில் உள்ள பிளாட் தாமான் உங்க்கு துன் அமீனா குடியிருப்புவாசிகளுக்கு வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இங்கா கோர் மிங் வாழ்த்து தெரிவித்தார்.
வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சு, ஜொகூர் மாநிலத்தின் வீட்டுவசதி மேம்பாடு, பொது வசதிகள் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதற்காக ரிம 216.44 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
இதன் அமைச்சர் இங் கோர் மிங் கூறுகையில், 13-வது மலேசியத் திட்டத்தின் முதலாவது உருளும் திட்டத்தின் (first rolling plan) கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி, மலிவு விலை வீட்டுவசதி திட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்பு, பொது வசதிகள், சமூகப் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, மற்றும் நகர்ப்புற-கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது என்றார்.
“இந்த ரிம 216.44 மில்லியன் ஒதுக்கீடு, ஜொகூர் மக்கள் தரமான வீட்டுவசதி, வசதியான பொது உள்கட்டமைப்புகள் மற்றும் மிகவும் நிலையான, வளமான வாழ்க்கைச் சூழலைப் பெறுவதை உறுதி செய்வதில் மடாணி (Madani) அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது”.
“உதாரணமாக, தாமான் உங்க்கு துன் அமினா அடுக்குமாடி குடியிருப்பு (Flat Taman Ungku Tun Aminah) 41 ஆண்டுகள் பழமையானது மற்றும் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் (blocks) கொண்டு ஜொகூரிலேயே மிகப் பெரிய அடுக்குமாடி வளாகமாகத் திகழ்கிறது”.
“இன்று, நமது சமூக நலத்திட்டத்தின் மூலம் முதல் 10 தொகுதிகளுக்கான புதுப்பித்தல் பணிகளைத் தொடங்குகிறோம்,” என்று ஸ்குடாயில் உள்ள தாமான் உங்க்கு துன் அமினா அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற அமைச்சின் நிகழ்ச்சியில் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக செயல் கட்சியின் (DAP) தேசியத் துணைத் தலைவருமான இங், பல்வேறு திட்டங்களின் மூலம் பொது வீட்டுவசதி நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கே இந்த நிதியின் பெரும்பகுதி பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
இவற்றில் ருமா மலேசியா (Rumah Malaysia), மக்கள் வீட்டுவசதி திட்டம் (PPR), மக்கள் வசிப்பிடத் திட்டம் (PRR) மற்றும் மடாணி உள்ளடக்கிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டம் (Madani Inclusive Housing Development) ஆகியவை அடங்கும்.
மேலும், சந்தைகள், வடிகால் அமைப்புகள், பொதுக் கழிப்பறைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்நிதி பயன்படுத்தப்படும்.
























