இராகவன் கருப்பையா – தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டுள்ள 1248 ஆட்டக்காரர்களில் தனித்துவம் வாய்ந்த ஒரு விளையாட்டாளர் படைத்துள்ள சாதனை வரலாற்றில் இடம்பெறுவது உறுதி.
‘கேப் வெர்டே’ எனும் ஒரு சிறிய நாட்டை பிரதிநிதித்து களமிறங்கிய அந்த கோல் காவலர் வெளிப்படுத்திய தாய் பாசம் உலக கவனத்தை ஈர்த்து மில்லியன் கணக்கானோரின் கண்களை குளமாக்கிய சம்பவம் நீண்ட நாள்களுக்கு நம் மனங்களில் நீங்காதிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த போட்டிகளில் கலந்து கொண்ட உலகின் முதல் நிலை கால்பந்தாட்டக்காரர்களில் பலர் அதி நவீன ஆடம்பர சொகுச மாளிகைகளில் வசிக்கும் கோடீஸ்வரர்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.
முழு நேர தொழில்முறை விளையாட்டாளர்களான அவர்களில் சிலர் தங்களுடைய பிரத்தியேக பயன்பாட்டுக்கென சொந்தமாக தனியார் விமானங்களையும் கொண்டுள்ளனர்.
இத்தகையோருக்கு மத்தியில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் முதல் முறையாக களம் கண்டவர்தான் ‘வோஸின்ஹா’ எனும் 40 வயதுடைய அந்த சாதாரண பேருந்து ஓட்டுனர்.
ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்த அவர், பொருளாதாரச் சுமையை சமாளிப்பதற்கு பகுதி நேரமாக மின் பணியாளர்(Electrician) வேலை செய்கிறார். அதற்கு அப்பாற்பட்டு கிடைக்கும் சிறிது நேரத்தில்தான் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
பிரேஸிலின் நோய்மார், இங்கிலாந்தின் கேன், ஃபிரான்ஸின் எம்பாப்பே, நோர்வேயின் ஹார்லான், போர்த்துகளின் ரொனால்டோ, ஸ்பெய்னின் லாமின் யாமால் மற்றும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போன்ற உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களை ஒரே தளத்தில் காண்பதற்குதான் அனைத்துலக ரசிகர்கள் ஆவலாய் காத்திருந்தனர்.
ஆனால் மேற்கு ஆஃப்ரிக்காவின் பெருநிலத்திலிருந்து சுமார் 570 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவான ‘கேப் வெர்டே’யிலிருந்து வோஸின்ஹா எனும் ‘புதியதொரு நட்சத்திரம்’ மின்னும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
முதல் முறையாக உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு தகுதி பெற்ற அந்நாடு, பூர்வாங்கச் சுற்றில் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் சமநிலை கண்டு அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்று கால்பந்து உலகை வியப்பில் ஆழ்த்தியது.
வோஸின்ஹாவின் அபார ஆட்டம் இச்சாதனைக்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது என்றால் அது மிகையில்லை. குறிப்பாக, தற்பொழுது இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ள பலம் பொருந்திய ஸ்பெய்னுக்கு எதிரான ஆட்டத்தில் அந்நாட்டின் தாக்குதல் ஆட்டக்காரர்கள் இவரை மீறி ஒரு கோல் கூட புகுத்த முடியாமல் நிலை தடுமாறி ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
‘யார் இந்த புதிய கால்பந்து வீரர்,’ என ‘மூக்கின் மேல் விரல் வைத்து’ உலகமே வியந்து நின்ற வேளையில், அந்த ஆட்டத்தின் முடிவில் அவர் வடித்த ஏக்கம் நிறைந்த அந்த ‘பாசக் கண்ணீர்’ மில்லியன் கணக்கானோரின் இதயங்களை கரையச் செய்தது.
உலகமே கண்டு ரசித்த தன் அபார ஆட்டத்தைக் காண்பதற்கு தனது அன்புத் தாய் அரங்கத்தில் இல்லாமல் போய்விட்டாரே என்பதே அவருடைய ”கவலைக் கண்ணீருக்கான’ காரணமாகும்.
கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டுமானால் ‘விசா'(முன் அனுமதிச் சீட்டு) பெறுவதற்கு குறைந்தபட்சம் 62,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒப்பந்தப் பத்திரம்(Bond) வேண்டும்.
குடும்பச் சூழல் காரணமாக அந்தத் தாய் அப்பத்திரத்தை பெற இயலவில்லை என்பது வருத்தமான விஷயம். இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவி பிரபஞ்சமே அவருக்குக் கைக் கொடுப்பதைப் போலான ஒரு சூழல் உருவாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
கேப் வெர்டே அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவுத் துறையை தொடர்பு கொண்டு அந்தத் தாய்க்கான ஒப்பந்தப் பத்திரம் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த உதவுமாறு முறையீடு செய்தனர்.
எவ்வித சுணக்கமுமின்றி அமெரிக்க அரசாங்கம் உடனே அதற்கு இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தத் தாயின் மனம் குளிர்ந்து எல்லையற்ற ஆனந்தத்தில் மூழ்கியது. இதற்கிடையே கேப் வெர்டேயில் உள்ள, ‘லின் ஜி’ எனும் பிரபல சீன தொழிலதிபர் ஒருவரும் வோஸின்ஹாவின் குடும்பத்திற்கு உதவும் முயற்சிகளை முடுக்கிவிட்டார்.
ஆடைகள் தயாரிக்கும் அவருடைய மனைவியின் தொழில்சாலையில் வோஸின்ஹாவின் உறவுக்காரப் பெண் ஒருவர் பணிபுரிவதாக செய்தியறிந்த லின் ஜி, உடனே அவருடன் தொடர்பு கொண்டு அந்தத் தாயை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
பயணத்திற்குத் தேவையான உடமைகள் மற்றும் பயணப் பெட்டி போன்ற சகல பொருள்களையும் வாங்குவதற்கான செலவுகளை லின் ஜி ஏற்றுக் கொண்டது எல்லா தரப்பினருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியானது.
உருகுவே நாட்டுடனான கேப் வெர்டேயின் 2ஆவது ஆட்டம் தொடங்குவதற்கு முன் அந்தத் தாய் அமெரிக்கா சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அதற்கான பயணச் செலவுகளை அந்நாட்டின் கால்பந்து சங்கம் ஏற்றுக் கொண்டது.
இதனிடையே ஃபிஃபா'(FIFA) எனும் உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபண்டினோவும் இவ்விவகாரத்தில் தமது பங்கையாற்ற களமிறங்கினார்.
ஏறத்தாழ 20 மணி நேர விமான பயணத்திற்குப் பிறகு அந்தத் தாய் அமெரிக்கா வந்திறங்கியதும் விமான நிலையத்திலிருந்து அவரை பாதுகாப்பாக அழைத்து வர தமது சொந்த மெய்க்காப்பாளர்களை அவர் அனுப்பி வைத்தார்.
அது மட்டுமின்றி கேப் வெர்டே கால்பந்து குழு தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் ஜியானி செய்து கொடுத்தார்.
அதோடு தமது செல்வாக்கை பயன்படுத்தி, கால்பந்து அரங்கில் சிறப்பு விருந்தினர்கள் அமரும் இடத்தில் அந்தத் தாய் அமர்ந்து விளையாட்டைக் காண்பதற்கும் அவர் வகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உருகுவே குழுவுடன் 2 – 2 எனும் கோல் எண்ணிக்கையில் சம நிலை கண்ட ஆட்டத்தின் முடிவில் தனது தாய் அமர்ந்திருந்த இடத்திற்கு ஓடிச் சென்ற வோஸின்ஹா, அவரை ஆரத்தழுவிய காட்சிகளை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் வெளியிட்டன.
“உலகக் கிண்ண போட்டிகளில் நான் விளையாடியதை என் அம்மா கண்டு ரசித்தது, கிண்ணத்தை வென்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது”, என வோஸின்ஹா உணர்ச்சிப் பொங்க பிறகு கருத்துரைத்தார்.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’, எனும் குறளுக்கு ஏற்ப, சாமானிய குடும்பத்தைச் சேர்ந்ததொரு அன்னைக்கும் அவருடைய அன்புப் புதல்வருக்கும் இடையிலான பாசப் பிணைப்புக்கு இந்த பிரபஞ்சம் கூட உறுதுணையாக இருக்கும் என்பதற்கு வோஸின்ஹாவின் அனுபவம் ஒரு எடுத்துக்காட்டு.
.























