மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசாம் பாக்கி, தனது சகோதரர் நசீர் பாக்கிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 178.29 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தத்தில் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.
மலேசியா – சிங்கப்பூர் எல்லையில் சாலை கட்டணம் மற்றும் வாகன நுழைவு அனுமதி முறையை உருவாக்குவது மற்றும் இயக்குவது தொடர்பான இந்த ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அசாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது ஒரு வணிக ஒப்பந்தம். என் சகோதரரின் நிறுவனத்திற்கு இந்த திட்டத்தை வழங்குவது என்பது சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் முடிவு என்று அவர் கூறினார்.
என்னோடு தொடர்புடைய அனைவரும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமா? நாட்டின் முன்னணி காது, மூக்கு, தொண்டை நிபுணராக இருக்கும் ஒரு தங்கை எனக்கு உள்ளார். அவரும் விசாரணை வளையத்திற்குள் வர வேண்டுமா? என்று ஊடகத்திடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்வைக்கப்பட்ட திட்ட முன்மொழிவுக்கான கோரிக்கையைத் (RFP) தொடர்ந்து, மே 26 அன்று இந்த முறையை உருவாக்குவதற்கும் இயக்குவதற்குமான ஆறு ஆண்டு கால ஒப்பந்தம் ‘இன்டெக்ரிட்டி பாடு எஸ்டிஎன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் நசீருக்கு 34% பங்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், அசாம் 2015-இல் கார்ப்பரேட் பங்குகளை வாங்கியது மற்றும் அதன் உரிமையைக் கொண்டிருந்தது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. தனது தம்பி நசீர் தனது வர்த்தகக் கணக்கைப் பயன்படுத்த தான் அனுமதித்ததாக அன்றைய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் வெளிப்படுத்தினார்.
செக்யூரிட்டீஸ் தொழில் (மத்திய வைப்புத்தொகை) சட்டம் 1991 இன் படி, மத்திய வைப்புத்தொகையில் தொடங்கப்படும் ஒவ்வொரு செக்யூரிட்டீஸ் கணக்கும், வைப்புச் செய்யப்பட்ட செக்யூரிட்டீஸின் உண்மையான பயனாளியின் பெயரிலேயே இருக்க வேண்டும்.
இருப்பினும், செக்யூரிட்டீஸ் சட்டங்கள் மீறப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று மலேசிய செக்யூரிட்டீஸ் கமிஷன் (Securities Commission of Malaysia) பின்னர் தெரிவித்தது.
அசாமின் பங்குரிமை மீதான மற்றொரு சர்ச்சை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் வெடித்தது. மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக 5% செலுத்தப்பட்ட மூலதனம் அல்லது 100,000 ரிங்கிட் மதிப்பு, இதில் எது குறைவோ அவ்வளவு பங்குகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற 2024-ஆம் ஆண்டு அரசாங்க சுற்றறிக்கையை அசாம் மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த சர்ச்சை எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிப்ரவரி மாதத்தில் ஒரு சிறப்பு அரசு பணிக்குழு விசாரணை நடத்தியது. அந்தக் குழுவின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ‘பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று புத்ராஜெயா தெரிவித்துள்ளது
-fmt
























