சிறுவர்கள் இணையத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், சைபர் புல்லிங் (இணைய மிரட்டல்), தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள், மோசடிகள் மற்றும் ஏமாற்றுதல் போன்ற ஆபத்துகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. இது இளம் பயனர்களைப் பாதுகாப்பதில் இணைய தளங்கள் அதிகப் பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தூண்டியுள்ளது.
இங்கு நடைபெற்ற “வடிவமைப்பிலேயே ஆன்லைன் பாதுகாப்பு, பயனர் பாதிப்புக்குள்ளாகும் காலத்தில் தளங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு” என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் பேசிய மலேசிய யுனிசெஃப் சிறுவர் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் சஸ்கியா புளூம் உலகெங்கிலும் உள்ள நாடுகள் “வடிவமைப்பிலேயே பாதுகாப்பு” என்ற அணுகுமுறையை அதிகளவில் பின்பற்றி வருவதாகக் கூறினார். இதன் மூலம் தளங்கள் தங்களின் அமைப்புகளில் தொடக்கத்திலிருந்தே பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் கூறுகையில், இந்த விவாதம் சமூக ஊடகங்களைத் தடை செய்வதா அல்லது அனுமதிப்பதா என்ற தேர்வாக அமையக் கூடாது என்றும், மாறாக, சிறுவர்கள் இணைய தளங்களில் எவ்வாறு பாதுகாப்பாகக் கற்றுக்கொள்ளவும், ஆராயவும், பங்கேற்கவும் முடியும் என்பதை உறுதி செய்யும் கேள்வியாகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சாலைப் பாதுகாப்போடு இதனை ஒப்பிட்டுப் பேசிய புளூம், அரசாங்கங்கள் சிறுவர்களுக்குச் சாலையில் எவ்வாறு பாதுகாப்பாகக் கடப்பது என்று கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக வாகனங்களும் உள்கட்டமைப்புகளும் பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்வதையும் கட்டாயமாக்குகின்றன என்று கூறினார்.
இணையப் பாதுகாப்பும் இதைப் போன்றதே ஆகும். நாம் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வெறும் அறிவை மட்டும் புகட்டக் கூடாது, ஒட்டுமொத்த அமைப்பையும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்குச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
இந்தக் குழு விவாதம், சர்வதேச ஒழுங்குமுறை ஆணையர்கள் மாநாடு 2026 இன் ஒரு பகுதியாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தனது முக்கிய உரையை ஆற்றிய மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) ஆணையர் டெரெக் ஜான் பெர்னாண்டஸ், ஒரு காலத்தில் வெளி உலகில் மட்டுமே இருந்த ஆபத்துகள், இப்போது ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வீடுகளுக்குள்ளேயே நுழைந்துவிட்டன என்று எச்சரித்தார்.
மேலும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் (CSAM) தொடர்பான குறைந்தது இரண்டு முதல் மூன்று வழக்குகள் தினசரி மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்க்கு வருகின்றன என்றும், அதோடு மோசடிகள், ஏமாற்று வேலைகள் மற்றும் சைபர் புல்லிங் உள்ளிட்ட பிற ஆன்லைன் தீங்குகள் தொடர்பான 1,708 வழக்குகள் பதிவாகின்றன என்றும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
நாம் சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், என்று கூறிய அவர், இணைய தளங்களை ஒழுங்குபடுத்துவதில் நாடுகள் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருந்தாலும், சிறுவர் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவான முன்னுரிமையாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தக் குழு விவாதத்தில் பேசிய கொள்கை வகுப்பாளர்களும் சிறுவர் நல ஆர்வலர்களும், இணைய பாதுகாப்பிற்கான பொறுப்பை இனி பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது மட்டுமே சுமத்திவிட முடியாது என்று கூறினர்.
பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவின் (சட்ட சீர்திருத்தம்) துணைத் தலைமை இயக்குநர் ஜி. தியாகு கூறுகையில், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அதிகப்படுத்தி பரப்பக்கூடிய அல்காரிதம்கள் மற்றும் பரிந்துரை அமைப்புகளின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதற்காகவே ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.
மலேசியாவின் முந்தைய சட்டக் கட்டமைப்பு பெரும்பாலும் ஒரு பாதிப்பு அல்லது தீங்கு ஏற்பட்ட பிறகு மட்டுமே விசாரணை மற்றும் வழக்குத் தொடர்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு எதிர்வினை அமைப்பாகவே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கருத்துச் சுதந்திரம் குறித்த கவலைகளைச் சமநிலைப்படுத்தும் அதே வேளையில், குறிப்பாகக் குழந்தைகளுக்காகப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கத் தள வழங்குநர்கள் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இச்சட்டத்தின் வெற்றியானது உள்ளடக்கங்களை நீக்குவது அல்லது அமலாக்க நடவடிக்கைகள் மூலம் மட்டுமே அளவிடப்படக் கூடாது என்றும், மாறாகக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இணைய உலகில் பாதுகாப்பாக உலாவ அனுமதிப்பதில் எவ்வளவு நம்பிக்கையை உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைய வேண்டும் என்றும் தியாகு கூறினார்.
இன்று எனது குழந்தை பாதுகாப்பான இயல்புநிலை அமைப்புகளுடனும், பொறுப்பான பரிந்துரை அமைப்புகளுடனும் இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துகிறது என்ற முழு நம்பிக்கையைக் குடும்பங்களுக்குத் தானாகவே வழங்கக்கூடிய ஒரு அமைப்பை நாம் காண விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுகாகம்) முதன்மைச் சிறுவர் ஆணையர் பரா நினி துசுகி கூறுகையில், சிறுவர்களின் இணைய அனுபவங்களை வடிவமைக்கும் கொள்கைகள் குறித்த விவாதங்களில் அவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்றார்.
இந்தக் குழு விவாதத்தில் ஏன் ஒரு சிறுவர் கூட இல்லை? அல்லது குறைந்தது ஒரு இளைஞராவது ஏன் சேர்க்கப்படவில்லை? என்னை நம்புங்கள், அவர்கள் தங்களின் அனுபவங்களின் அடிப்படையில் உங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை வழங்குவார்கள், என்று அவர் குறிப்பிட்டார்.
-fmt
























