குழந்தைகள் இடம்பெறும் பிரச்சார வீடியோக்களை அகற்றுமாறு ஹராப்பானை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: குழந்தைகள் உரிமை அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

பக்கத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) மற்றும் அதன் அங்கத்துவக் கட்சியான DAP உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதுதொடர்பான பிரச்சாரப் பொருட்களைத் தங்களின் தளங்களிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் குழந்தைகள் உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் G2 Malaysia, மலேசிய குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Children’s Protection Society Malaysia) மற்றும் குழந்தைகளின் குரல் (Voice of the Children) ஆகிய அமைப்புகள், குழந்தைகள் அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ளவோ அல்லது அதற்கு ஒப்புதல் அளிக்கவோ முடியாது என்றும், பிரச்சாரக் காணொளிகளில் தோன்றுவது அவர்களுக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டின.

1995-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் மலேசியா கையெழுத்திட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவ்வமைப்புகள், பெற்றோரின் சம்மதம் என்பது ஒரு குழந்தையின் தனிப்பட்ட உரிமைகளை மீற முடியாது என்று வாதிட்டன.

“குழந்தைகள் உரிமைகளுக்கானக் குழு (Committee on the Rights of the Child) தெரிவித்துள்ளதாவது: ‘பெரியவர்கள் குழந்தைகளைக் கையாளுவது, அவர்கள் என்ன பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சூழ்நிலைகளில் அவர்களை வைப்பது அல்லது பங்களிப்பின் மூலம் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயத்திற்கு உட்படுத்துவது போன்றவை முறையான செயல்பாடுகள் அல்ல.’

பெரியவர்களின் தூண்டுதலால் ஒரு குழந்தை முழக்கங்களைச் சொல்வது, அக்குழந்தை தனது சொந்தக் குரலைப் பயன்படுத்துவதாகாது; மாறாக, பெரியவர்கள் அந்தக் குழந்தையின் குரலைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு இதன் பின்னணி தெரியாது. அரசாங்கத்தின் செயல்பாடுகள், தேர்தல் அறிக்கையின் சாராம்சம் அல்லது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வார்த்தைகளின் அர்த்தம் ஆகியவற்றை அவர்களால் சீர்தூக்கிப் பார்க்க முடியாது. தங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை ஆதரிக்கும்படி அவர்கள் கேட்கப்படுகிறார்கள்,” என்று அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்தன.

இணையத்தில் பதிவேற்றப்பட்டதை அழிக்க முடியாது

குழந்தைகளின் தனிப்பரிவு உரிமைகளுக்கு (Privacy) ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

“காணொளிப் பதிவுகளுக்குக் காலாவதி தேதி இல்லை. இந்த வாரம் படமாக்கப்பட்ட ஒரு குழந்தை, தன் வாழ்நாள் முழுதும் இணையத்தில் தேடப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கும். தான் தேர்வு செய்யாத, விலக்கிக்கொள்ள முடியாத ஓர் அரசியல் நிலைப்பாட்டுடன் அக்குழந்தை தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்கும். அதோடு, இணையத்தில் அரசியல் சார்ந்த உள்ளடக்கங்களுக்கு வரும் அவதூறுகளுக்கும் அக்குழந்தை ஆளாக நேரிடும்,” என்று அவர்கள் கூறினர்.

தேர்தல் பிரச்சாரப் பொருட்களின் ஒரு பகுதியாக, DAP தலைவர் இங்கா கோர் மிங் மற்றும் ஒரு குழந்தை இடம்பெறும் காணொளிகளில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட திரைக்காட்சி.

சமூக வலைதளங்களில் குழந்தைகளை மையப்படுத்தி வெளியிடப்பட்ட மூன்று பிரச்சாரக் காணொளிகளை ‘மலேசியாகினி’ (Malaysiakini) கண்டறிந்தது.

அவற்றில் இரண்டு காணொளிகளில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இங்கா கோர் மிங் (Nga Kor Ming) ஒரே குழந்தையுடன் காணப்பட்டார்; அதில் ஒரு காணொளி அவரது டிக்டாக் (TikTok) பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

ஒரு காணொளியில், இங்கா மற்றும் அந்தச் சிறுவன் வாக்காளர்களை வாக்களிப்பதற்காகத் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டனர். மற்றொரு காணொளி ஹரப்பானுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியது.

“நெகிரி செம்பிலானை மேலும் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற ஹரப்பானைத் தற்காப்போம். உங்கள் குடும்பத்துடன் இருக்க ஊருக்குத் திரும்புங்கள், ஹரப்பானுக்கு வாக்களியுங்கள்,” என்று DAP நாடாளுமன்ற உறுப்பினரான இங்கா கூற, அந்தச் சிறுவன் அவர் சொன்னதை அப்படியே திரும்பக் கூறினான். அந்தச் சிறுவன் கட்சியின் பிரச்சார ஆடையையும் அணிந்திருந்தான்.

மற்றொரு பிரச்சாரக் காணொளியில் போக்குவரத்து அமைச்சரும் சென்னா (Chennah) சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினருமான அந்தோணி லோக் (Anthony Loke), ஹரப்பான் கொடிகளை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையுடன் காணப்பட்டார்.

வழிகாட்டுதல்களுக்கான கோரிக்கை

DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் மற்றும் ஒரு குழந்தை இடம்பெறும் ஹரப்பான் பிரச்சார வீடியோவின் திரைப்பிடிப்பு

மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் எஞ்சிய நாட்களுக்குக் குழந்தைகளைப் பிரச்சாரப் பொருட்களிலிருந்து அகற்றுமாறும், இனி குழந்தைகளைப் பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்குமாறும் ஹரப்பான் மற்றும் DAP கட்சிகளை இந்தச் சமூக ஆர்வலர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

“இதே கொள்கை அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமாகப் பொருந்தும். இதேபோன்று வேறு எந்தக் கட்சியின் பிரச்சாரப் பொருட்கள் இருந்தாலும் அதற்கும் நாங்கள் இதையேதான் கூறுவோம்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பெற்றோருடன் குழந்தைகள் இயல்பாக உடன் இருப்பதை அனுமதிக்கும் அதே வேளையில், பிரச்சாரப் பொருட்கள் மற்றும் நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் தெளிவான விதிகளை அறிமுகப்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission) அவ்வமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சுயக்கட்டுப்பாட்டைப் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

“அதிகாரம் என்பது இன்னும் தடை செய்யப்படாத ஒன்றின் எல்லைகளைச் சோதித்துப் பார்ப்பதல்ல; மாறாக, சரியான முன்னுதாரணத்தை அமைப்பதே அதன் கடமையாகும்”.

குழந்தைகளால் வாக்களிக்க முடியாது, ஒப்புதல் அளிக்க முடியாது, விலகிக் கொள்ளவும் முடியாது. எனவே, அவர்களைப் பிரச்சாரம் செய்யுமாறு கேட்கக்கூடாது,” என்று அந்த அறிக்கை நிறைவு பெறுகிறது.