பேராக், லாருட் அருகே உள்ள பழத்தோட்டக் குடிலில் நேற்று போலீசாரை பரங்கிக் கத்தியால் வெட்ட முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜூன் 23 அன்று, இஜோக், கம்பங் சுங்கை ஜெர்னி பகுதியில் செலாமா போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளைக் காயப்படுத்திவிட்டு, இந்த 39 வயது நபர் தப்பியோடியதாக நம்பப்படுகிறது என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் அல்வி ஜைனல் அபிதீன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.20 மணியளவில், பத்து குராவ், கம்பங் கிலியான் குனுங் இஜோக்கில் உள்ள ஒரு குடிலில் அந்தச் சந்தேக நபர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவரைத் தேடிக் கண்டுபிடித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
போலீசார் அந்தச் சந்தேக நபரை கைது செய்வதற்காக நெருங்கியபோது, அவர் உடனடியாக எழுந்து, ஒரு பரங்கிக் கத்தியை எடுத்து அதிகாரிகளைத் தாக்க முயன்றார்,” என்று இன்று செலாமா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
போலீசார் தற்காப்பிற்காக அவரது காலை நோக்கி ஒரு முறை சுட்டதில், அவருடைய வலது மற்றும் இடது தொடைகளில் காயம் ஏற்பட்டது, என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபர் கீழே விழுந்த பிறகும் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருதரப்புக்கும் இடையே போராட்டம் ஏற்பட்டது. அதன் பின்னரே போலீசாரால் அந்தப் பரங்கிக் கத்தியைப் பறிமுதல் செய்ய முடிந்தது.
சம்பவ இடத்திற்கு காலை 9.20 மணிக்கு வந்த மருத்துவக் குழுவினர், அந்தச் சந்தேக நபர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.
சில்லறை வேலைகள் செய்து வந்த அந்தச் சந்தேக நபர் மீது ஏற்கனவே 10 குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதாக அல்வி தெரிவித்தார்.
-fmt
























